Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

ஊட்டி : தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த இரு மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் மைதானத்திலும் நடந்து வந்தது.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நேற்று அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில், உடற்கல்வி ஆய்வாளர் பெரிய்யா வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார், குன்னூர் நகராட்சி துணை தலைவர் வாசிம், கே.எம்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நீலகிரி எம்பி ராசா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இத்துறைக்கு பொறுப்பேற்ற பின் பல்வேறு புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி மாணவர்களை விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தி வருகிறார்.

இவர், பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டில் 29 விளையாட்டு அரங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் தோறும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், நீலகிரி மாவட்டத்திற்கும் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர நீலகிரி மாவட்டத்தில் மழை மேலிட பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்களுக்கு இங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், குன்னூரில் ஹாக்கி விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற பல்வேறு திட்டங்களும் திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது இளைஞர்களுக்கு சுகர், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வருகிறது. இதற்கு காரணம் பழைய உணவு பழக்கங்களை மறந்துவிட்டு, நவீன உணவு பழக்கங்களை மேற்கொள்வது.

மேலும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளாமலும், விளையாட்டில் ஈடுபடாமல் உள்ளதே உடல்நலம் பாதிப்பு மற்றும் மூளை பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, இதனை கலைய மாணவர்கள் உரிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டில் ஒன்றுதான் ஏற்றத்தாழ்வு இருக்காது. எனவே, அனைவரும் உடற்பயிற்சி மேற்கொள்வது மட்டுமின்றி விளையாட்டில் ஈடுபட வேண்டும்.

தற்போது மாவட்ட அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் அடுத்து மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்று, அங்கு நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், மாணவ மாணவிகள், அரசுத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.