கோபி: இளவரசரை போல இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: கோபியில் இளவரசரைப் போல் இருக்கிறேன் என்று எட்பபாடி பழனிசாமி கூறியிருக்கிறார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் 45 ஆண்டு காலம் எனது பணியை ஆற்றி வருகின்றேன்.
என்னை பொருத்தவரை இளவரசரை போல் என்றும் இருந்ததில்லை. எளிமையான வாழ்க்கை நடத்துபவன் நான். அப்படி இருந்த காரணத்தின் அடிப்படையில் தான் மூன்று முறை வாக்காளர்களை தேர்தல் களத்தில் சந்திக்காமலே நான் வெற்றி பெற்ற வரலாறு இந்த தொகுதியில் இருக்கிறது. நேற்று முன்தினம் தொடர்ந்து பல்வேறு சங்கங்கள் சார்பாக கடிதங்கள் என்னிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்துகின்ற அளவிற்கு கடிதங்கள் இருக்கின்றன. எனது தியாகம், உழைப்பு மற்றும் சேவையை பற்றி யாரும் கொச்சைப்படுத்தி விடக் கூடாது என்ற முறையில் கடிதங்கள் வழங்கியுள்ளனர்.
உழைப்பவரை எவராலும் வீழ்த்த இயலாது. தியாகத்திலும் சோதனையிலும் பிறந்த இயக்கம் தான் அதிமுக. அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலத்தை விரைவில் பார்க்கப் போகிறோம். பல பேர் நம்மை விட்டு சென்றாலும் கவலைப்பட தேவையில்லை. நன்றி எங்கே இருக்கிறதோ அங்கு வெற்றி பெறும். நன்றியை தகர்த்தெறிய எந்த சக்தியாலும் முடியாது. சோதனை வந்தாலும் நன்றி உணர்வுடன் பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
* நகைகளை வழங்கி கட்சியை காப்பாற்றியவர் ஜெயலலிதா
‘கட்சிக்காக உழைத்த எம்ஜிஆரை யாராலும் வீழ்த்த முடியவில்லை. அதே போலத்தான் ஜெயலலிதாவும், தியாக வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இயக்கத்தை காப்பதற்காக தனது நகை, பொருள் அனைத்தையும் 1989ல் வழங்கி இயக்கத்தை வலிமைப்படுத்தினார்’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

