சென்னை: மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிரின்ஸ் ஸ்ரீவாரி சீனியர் செகண்டரி பள்ளி வளாகத்தில் நவராத்திரி கொண்டாட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. பிரின்ஸ் கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் கே.வாசுதேவன் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்ன வெங்கடேஷ், செயலாளர் ரஞ்சனி வாசுதேவன், கல்வி ஆலோசகர் கே.பார்த்தசாரதி, முதல்வர்கள் டி.பத்மா, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி, ஆன்மிக சொற்பொழிவாளர் கலைமாமணி நாகை முகுந்தன் ஆகியோர் நவராத்திரி விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அப்போது நல்லி குப்புசாமி பேசும்போது, கலைப் பண்பாட்டுடன் கூடிய கல்வி தான் சிறந்த கல்வி. அந்த வகையில், பிரின்ஸ் கல்விக் குழுமம் கல்வியுடன் மாணவர்களுக்கு நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் சிறந்த பழக்க வழக்கங்களை கற்றுத் தருகிறது.
இது அவர்களின் ஒழுக்கத்திற்கும், சுய கட்டுப்பாட்டிற்கும் உறுதுணையாகவும், மாணவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவும், என்றார். தொடர்ந்து, நாகை முகுந்தனின் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் முன்னாள் துணை ஆட்சியர் கோபால், சென்னை தூர்தர்ஷன் இயக்குநரின் முன்னாள் நேர்முக உதவியாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.