புதுடெல்லி: இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டின் தொடக்க விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் உற்பத்தி செய்ய இதுவே சிறந்த நேரம். இந்தியா சமீபத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், இந்த திறனைக் கொண்ட உலகின் 5 நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் இணைப்பு இனி சலுகை அல்லது ஆடம்பரம் அல்ல; அது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி. இந்தியாவில் 1 ஜிபி வயர்லெஸ் டேட்டா டீயின் விலையை விட மலிவாகி உள்ளது. செமிகண்டக்டர்கள், மொபைல்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் இந்தியா மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.
கடந்த பத்தாண்டுகளில், மொபைல் போன் உற்பத்தித் துறை கோடிக்கணக்கான நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. உலகளாவிய தடைகள் எங்கிருந்தாலும், தீர்வுகளை வழங்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.
மின்னணு சாதன உற்பத்தியில், இந்திய நிறுவனங்கள் ஏன் நம்பகமான உலகளாவிய சப்ளையர்கள் மற்றும் கூட்டாளர்களாக மாற முடியாது? மொபைல் உற்பத்தியில், சிப்செட்டுகள், பேட்டரிகள், டிஸ்பிளேக்கள் மற்றும் சென்சார்கள் போன்ற உபகரணங்கள் நாட்டிற்குள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.