மணிப்பூர்: இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோட மணிப்பூர் சென்றடைந்தார். குக்கி மக்கள் அதிகம் வசிக்கும் சுராசந்திரப்பூருக்கு பிரதமர் மோடி இம்பாலில் இருந்து சுராசந்திரப்பூருக்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் வருகையையொட்டி இம்பால் நகரம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மணிப்பூரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில் பிரதமர் மோடி, கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இன்று மணிப்பூர் சென்றுள்ளார். முன்னதாக மிசோரம் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கிருந்து மணிப்பூருக்கு சென்றார்.
இம்பால் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா மற்றும் தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் ஆகியோர் வரவேற்றனர். சுராசந்த்பூரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.8,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, மாநில தலைநகர் இம்பால் மற்றும் சுராச்சந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் பேரணிகள் நடைபெறும் இடங்களான இம்பாலில் உள்ள 237 ஏக்கர் பரப்பளவு கொண்ட காங்லா கோட்டை மற்றும் சுராசந்த்பூரில் உள்ள மைதானம் ஆகிய இடங்களில் மாநில மற்றும் மத்தியப் படைகளின் வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுராசந்த்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதே போல், இம்பாலில் ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மணிப்பூர் ஒரு முக்கிய தூணாக உள்ளது. மணிப்பூர் தைரியம், வீரம் நிறைந்த பூமி. இம்பாலில் இருந்து சாலை வழியாக சூரசந்த்பூருக்குச் செல்லும் வழியில் எனக்குக் கிடைத்த அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இன்று திறக்கப்பட்ட திட்டங்கள் மணிப்பூரில் உள்கட்டமைப்பு, சுகாதாரம் அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று சூரசந்த்பூரில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.