புதுடெல்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். சீனாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்ல உள்ள நிலையில் அவரை சந்தித்து பேச சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யீ, இந்தியா வந்துள்ளார். இங்கு அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு நட்பு குறித்து ஆலோசனை நடத்திய அவர், இறுதியாக நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது இருநாடுகள் இடையே உள்ள ஒப்பந்தம், சீனா உச்சி மாநாட்டில் மேற்கொள்ள உள்ள நிகழ்வுகள், அமெரிக்க வரி விதிப்பின் பாதிப்பை குறைக்க இருநாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘கடந்த 10 மாதங்களில் இந்தியா-சீனா உறவுகள் ஒருவருக்கொருவர் நலன்கள் மற்றும் உணர்திறன்களை மதிப்பதன் மூலம் நிலையான முன்னேற்றம் அடைந்துள்ளன.
தற்போது சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு கசானில் சீன அதிபர் ஜின்பிங்கை நான் சந்தித்ததிலிருந்து இருநாட்டு உறவுகளும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. இனி தியான்ஜினில் நடக்கும் உச்சிமாநாட்டின் போது எங்கள் அடுத்த சந்திப்பை நான் எதிர்நோக்குகிறேன். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நட்பு மிகவும் முக்கியமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.