பிரதமர் இன்டன்ஷிப் திட்டத்தின் சுணக்கத்துக்கு காரணம் என்ன? ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி கனிமொழி கேள்வி
புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்வியில்,‘‘பிரதமர் இன்டன்ஷிப் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை எத்தனை?. இத்திட்டத்தை செயல்படுத்துதலில் தனியார் நிறுவனங்களுடன் போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததால், அதில் குறைந்த அளவிலான இளைஞர்களே பங்கேற்கிறார்கள் என்பதை ஒன்றிய அரசு அறிந்துள்ளதா.
அப்படியானால் இத்திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் இத்திட்டத்தின் கீழ் மிகக்குறைந்த ஆட்சேர்ப்புக்கான காரணங்களைக் கண்டறிய அரசாங்கம் ஏதேனும் மதிப்பாய்வு அல்லது மதிப்பீட்டை நடத்தி உள்ளதா?அப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் இல்லையென்றால் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக பிரதமர் இன்டன்ஷிப் திட்டத்தை மிகவும் பயனுள்ள வகையில் மறுசீரமைக்க அரசாங்கம் ஏதேனும் திட்டமிட்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன என்று கேட்டிருந்தார்.
இதையடுத்து அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் கார்ப்பரேட் விவகாரத்துறை இணையமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா அளித்த பதிலில், ‘‘பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்டம் 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் சிறந்த 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டன்ஷிப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும். மேலும் திட்டத்தை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் தொழில்துறை, மாநில அரசுகள், தொழில் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுடன் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தொடர்புகொண்டு, அவர்களை ஒருங்கிணைத்து பணிபுரிந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.