சென்னை: பிரதமர், முதல்வர்கள் தகுதி நீக்க சட்ட மசோதாவிற்கு வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல வழக்குகளில் விசாரணைக்கு கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள், எம்பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘இந்தியாவின் ஜனநாயகத்தை அழிக்கும் வகையிலும், எதிர்க் கட்சிகளை முடக்கும் வகையிலும், 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உள்நோக்கம் கொண்ட 130வது திருத்த மசோதாவில், 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால் பிரதமர் முதல் எம்எல்ஏ.க்கள் வரை பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறுகிறது. எனவே, ஒன்றிய அரசின் இந்த மசோதாவை திரும்ப பெற, ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் ஒன்று திரள வேண்டும்,’என்று கூறப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கையில்,‘கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் 30 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிரதமர் மற்றும் முதல்வர்கள் உள்பட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்டமுன்வடிவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது மக்களாட்சியை ஒடுக்க பாஜ முன்னெடுக்கும் சதியாகவும் அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது. இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்,’என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது.