பிரதமர், முதல்வர் பதவி நீக்க மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து விலக காங்கிரஸ் முடிவு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுடெல்லி: பிரதமர், முதல்வர்கள் பதவி நீக்க மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து காங்கிரஸ் விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் பிரதமர், முதல்வர்கள், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் பதவி நீக்க மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி, கடுமையான குற்றச்சாட்டின் கீழ் கைதாகி 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் பதவி நீக்கம் செய்ய முடியும். இதற்காக அரசியலமைப்பு திருத்தம் உட்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் மக்களவையின் 21 எம்பிக்களும், மாநிலங்களவையின் 10 எம்பிக்களும் மசோதாவின் அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பார்கள். இதுவரை இந்த விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்கப்படவில்லை. இந்நிலையில், இக்கூட்டுக்குழுவில் இருந்து விலக காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. கட்சியின் இந்த முடிவு குறித்து விரைவில் மக்களவை சபாநாயகரிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என சில மூத்த தலைவர்கள் கூறி உள்ளனர்.
ஏற்கனவே, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டுக்குழுவில் இடம்பெறப் போவதில்லை என அறிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென சமாஜ்வாடி கூறியிருப்பதால் அக்கட்சியும் கூட்டுக்குழுவில் இருந்து விலகும் மனநிலையில் இருக்கிறது. பிற எதிர்க்கட்சிகள் அவர்களின் முடிவை தெரிவிக்காவிட்டாலும், கூட்டுக்குழுவில் இணைய எந்த கட்சிகளும் விருப்பம் தெரிவிக்கவில்லை.
அதே சமயம் இந்த விவகாரத்தில் கூட்டுக்குழுவை புறக்கணிப்பதாக எந்த கட்சியும் தன்னிடம் அணுகவில்லை என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறி உள்ளார்.