Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர், முதல்வர் பதவி பறிக்கும் மசோதா மன்னர் தனக்கு பிடிக்காதவர்களை வெளியேற்ற திட்டமிடுகிறார்: சுதர்சன் ரெட்டி அறிமுக நிகழ்ச்சியில் ராகுல் காந்தி ஆவேசம்

புதுடெல்லி: பிரதமர், முதல்வர் பதவி பறிக்கும் மசோதாவை கொண்டு வருவதன் மூலம் மன்னர் தனக்கு பிடிக்காதவர்களை வெளியேற்ற திட்டமிடுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். அவரது அறிமுக கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்பி திருச்சி சிவா, சமாஜ்வாடி கட்சியின் ராம் கோபால் யாதவ், சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர் சஞ்சய் ராவத், மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சதாப்தி ராய் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பேசியதாவது: நாட்டில் இன்று, அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கும் அதை பாதுகாப்பவர்களுக்கும் இடையே போர், சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி பல ஆண்டு காலம் நீதித்துறை மற்றும் சட்ட அனுபவம் கொண்டவர். நான் தற்செயலாக பார்த்தபோது அவரது சட்டைப் பையில் இந்திய அரசியலமைப்பின் நகல் இருந்தது.

52 ஆண்டுகளாக அதைத்தான் தன்னுடனேயே வைத்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார். அதற்கான காரணம் குறித்து கேட்டபோது, அனைத்து சட்ட விவாதங்களுக்குமான பதிலை அளிப்பது அரசியலமைப்புதான் என அவர் பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா குறித்த சத்தம் அதிகம் கேட்கிறது. மன்னர் தனது விருப்பப்படி, தனக்குப் பிடிக்காதவர்களை வெளியேற்ற திட்டமிடுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை, 30 நாட்கள் சிறையில் அடைத்து அவரது பதவியையும் பறிக்க திட்டமிடுகிறார். நாம் மீண்டும் பழங்காலத்துக்கு திரும்புவதைப் போன்றது இது. அப்போது மன்னர் தனது விருப்பப்படி யாரையும் நீக்க முடியும். அதே வழியில் தற்போது பா.ஜவுக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால், அவர்களை கைது செய்யுமாறு அமலாக்கத் துறையிடம் கேட்கலாம். மேலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை கைது செய்து 30 நாட்களுக்கு பின் பதவியில் இருந்து வெளியேற்றலாம்.

கடந்த 11 ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைக்க அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற தன்னாட்சி நிறுவனங்களுக்கு கடுமையான அதிகாரங்களை வழங்க நாடாளுமன்ற பெரும்பான்மையை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்துவதை நாங்கள் கண்டிருக்கிறோம். இப்போது, இந்த புதிய மசோதாக்கள் மாநிலங்களில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஸ்திரமின்மைக்கு ஆளாக்கவும் ஆளும் கட்சியின் கைகளில் கருவிகளாக மாற உள்ளன. பீகார் மாநிலத்தில் வாக்காளர் உரிமை பயணம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் அங்கு தீயைப் போல பற்றி எரிகிறது. சிறுவர்கள்கூட தற்போது இதுபற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள். உண்மையில் இந்த நாட்டின் ஆன்மா எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்கிறது. பல மாநிலங்களில் வாக்குகள் திருடப்பட்டு தற்போது பீகாரிலும் அதற்கான முயற்சி நடப்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

* முன்னாள் துணை ஜனாதிபதி எங்கே?

ராகுல்காந்தி பேசும்போது, ‘தற்போது ஏன் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது? துணை ஜனாதிபதியாக இருந்த அந்த நபர் எங்கே போனார்? அவர் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறார்? அவையில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக உரத்த குரலில் பேசிய அவர் திடீரென மவுனமானது ஏன்? ஒரே ஒரு வார்த்தைகூட அவரிடமிருந்து வரவில்லையே ஏன்?. அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பது பற்றி ஒரு பெரிய கதை உள்ளது. உங்களில் சிலருக்கு அது தெரிந்திருக்கலாம், சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அதன் பின்னால் ஒரு கதை உள்ளது. அவர் ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்பது பற்றியும் ஒரு கதை உள்ளது. அவர் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாது, மறைந்து இருக்க வேண்டியது இருக்கிறது. அது அனைவருக்கும் தெரியும். நாம் வாழும் காலத்திலேயே அவர் முற்றிலும் அமைதியாகிவிட்டார்’ என்றார்.

* இந்திய நீதித்துறையில் உயர்ந்த மனிதர்

துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கார்கே அறிமுகப்படுத்தினார். அப்போது,’ சுதர்சன் ரெட்டி இந்திய நீதித்துறையில் உயர்ந்த மனிதர். நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு அவர் பெயர் பெற்றவர்’ என்றார்.