கோவை: கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி பிரதமர் மோடி வைத்தார். ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவிக்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தார். பிரதமரை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், ஆளுநர் ரவி, அமைச்சர் சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் இந்த மாநாடு 21ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஆந்திர மாநிலம் சத்யசாய் புட்டபர்த்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு ஒரு மணிக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் மற்றும்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன், பாரிவேந்தர் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதேநேரத்தில் பாஜக கூட்டணியில் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாலும், கடந்த முறை நேரம் கேட்டபோது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி ஆகியோருக்கு அனுமதி அளிக்காததாலும் அவர்கள் இந்த முறை அனுமதி கேட்கவே இல்லை.
இந்த வரவேற்புக்குப் பின்னர் தனியாக பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை மோடி நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து காரில் கோவை கொடிசியா அரங்கம் சென்றார். அங்கு இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார். மாநாட்டில், நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு நிதி திட்டத்தின் கீழ் 21வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை விடுவித்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.
மேலும், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு மோடி விருதுகள் வழங்கினார். தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார். இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விவசாய உற்பத்தி பொருட்கள் அடங்கிய அரங்குகளை பிரதமர் பார்வையிட்டார். மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இயற்கை வேளாண் முறையை பின்பற்றுவோர், விஞ்ஞானிகள், இயற்கை வேளாண் பொருட்கள் விநியோகிப்போர் கலந்து கொண்டனர்.
மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் மதியம் 3.25 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொடிசியா வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவையில் முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 40 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து சோதனை நடந்தது. டிரோன் பறக்க தடை செய்யப்பட்டிருந்தது. கோவை, சேலம், ஈரோடு, ஊட்டி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக நேற்று கோவை விமான நிலையம் முதல் கொடிசியா அரங்கம் வரை பிரதமர் செல்லும் வழியில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கொடிசியா வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரதமர் மோடி கோவை வந்ததும் அவரை, பீளமேடு விமான நிலையத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பிரதமர் மோடியை வரவேற்ற தலைவர்கள், பீளமேடு விமான நிலையத்தில், பிரதமர் மோடியை வழியனுப்பு நிகழ்விலும் பங்கேற்றனர். கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு மறுத்து விட்ட நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வந்ததால், அவரது வருகையை கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


