சென்னை: தமிழகம் வந்த பிரதமர் மோடியை கண்டித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சார்பில் தி.நகர் பேருந்து நிலையம் அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயனமாக தமிழகம் வந்துள்ளார். இதை கண்டிக்கும் வகையில் மே 17 இயக்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை தி.நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கருப்பு உடை அணிந்து கொண்டு, கையில் மோடியே திரும்பி போ என்ற வாசகம் அடங்கிய பதாகையை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மோடிக்கு எதிராக, ‘தமிழர் பெருமை செல்லும் கீழடி அறிக்கையை நிராகரிக்காதே, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை நிறுத்தாதே, தமிழ்நாட்டு மீனவர்களை கொல்லும் இலங்கை மீது நடவடிக்கை எடு, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்காதே, இஸ்லாமியரை வஞ்சிக்கும் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறு’ என கோஷங்கள் எழுப்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.