டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூருக்கு பயணம்; ரூ.8,500 கோடி மதிப்பில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மணிப்பூரில் மே 2023ல் குக்கி, மெய்தேய் சமூக மக்கள் இடையே பழங்குடியின அந்தஸ்து பெறுவது தொடர்பாக இனக்கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாயினர். இரு சமூகங்களை சேர்ந்த ஆயுத குழுக்களால் இன்னும் மணிப்பூரில் பதற்றம் தணிந்தபாடில்லை. கடந்த பிப்ரவரியில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் செல்லவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில், பிரதமர் மோடி வருகிற 13ம் தேதி (நாளை) மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நாளை மணிப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மணிப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மணிப்பூரில் ரூ.8,500 கோடி மதிப்பில் சாலைகள், பாலங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, குடிநீர் உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சுராச்சந்த்பூரில் மோடியை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் அகற்ற முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.