Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம் : நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேட்டி

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி பல முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விவாதம் நடத்தாவிட்டால் அவை முடங்குவதற்கு ஒன்றிய அரசே பொறுப்பு என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், "இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை காக்கும் நாடாக விளங்குகிறது. பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது. பீகார் மாநில தேர்தல் தோல்வி எதிர்க்கட்சிகளை அமைதியற்றவர்களாக மாற்றியுள்ளது. வெற்றியின் ஆணவத்தையும் தோல்வியின் விரக்தியையும் அவையில் வெளிப்படுத்தக் கூடாது. நாடாளுமன்றத்தை கூச்சல், குழப்பம் ஏற்படுத்தும் இடமாக பயன்படுத்த வேண்டாம். நாட்டிற்காக நாம் செய்ய விரும்பும் விஷயங்களை விவாதிக்கள் கூட்டத்தொடரில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் அதன் பொறுப்பை உணர்ந்து வலுவான பிரச்சினைகளை விவாதத்தில் எழுப்ப வேண்டும்.

மக்கள் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச வேண்டும்.இளம் எம்.பி.க்கள், முதல் முறை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அதிகமாக பேச வாய்ப்பளிக்க வேண்டும். நாட்டை கட்டமைக்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பயன்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்கள் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம். பீகார் தேர்தல் தோல்வியின் மனச் சோர்வில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். தேர்தல் தோல்வியை வெளிப்படுத்துவதற்கு அவையை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது,"இவ்வாறு தெரிவித்தார்.