பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம்
கோவை : பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் மாநாடு வரும் 19-ம் தேதி புதன் கிழமை தொடங்க உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருது வழங்க உள்ளார். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பங்கேற்க பிரதமர் மோடி புதன்கிழமை மதியம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.
இந்த நிலையில், கோவை மாநகர காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்," சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கோவை மாநகருக்கு வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து விமான நிலையம் வழியாக வர தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக நீலாம்பூரில் இருந்து எல் அண்டு டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக வரவேண்டும்.
கோவையில் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பில் யூ-டர்ன் செய்து புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக எல் அண்டு டி பைபாஸ் அடைந்து செல்லலாம். நீலாம்பூரில் இருந்து கோவைக்குள் வரும் இலகு ரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோளப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக வரலாம்.
கோவையில் இருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் அரசு பஸ்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அவினாசி ரோடு, டைடல் பார்க் சந்திப்பில் யூ-டர்ன் செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் ரோடு வழியாக செல்லலாம். கோவையில் இருந்து வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள் நேரத்திற்கு தகுந்தாற் போல் சித்ரா வழியாக அனுப்பப்படும்.
நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வைர விமான நிலையத்துக்குள் வாகனங்கள் மற்றும் கால்டாக்சிகள் செல்ல தடை செய்யப்படுகிறது. அன்று விமான நிலையம் செல்பவர்கள் 12 மணிக்கு முன்பாக செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இருந்து நடந்து செல்ல வேண்டும்.
பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை அவினாசி ரோடு, மேம்பாலம் மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் அதற்கு தகுந்தாற்போல் மாற்று பாதையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதுபோன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் மாநகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
நாளை மறுநாள் வரை விமான நிலைய வாகன நிறுத்தத்தில் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


