சென்னை: பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்கள் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது;
எடப்பாடி பழனிசாமி புகழாரம்:
25 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்ததற்காக, மாண்புமிகு பிரதமர் மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வாழ்த்து:
இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நரேந்திர மோடி அவர்களின் இந்த சாதனைப் பயணம் 2001-ஆம் ஆண்டு புஜ் நில நடுக்கத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் தொடங்கியது. அதன்பின் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் 135 நாள்கள் அந்தப் பதவியில் தொடர்வதன் மூலம், ஜவகர்லால் நேரு அவர்களுக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக அப்பதவியில் நீடிக்கும் இரண்டாவது தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சாதனைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்!. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.