‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் மலைக்கோட்டை மாவட்டத்தில் 2 தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்திக்கிட்டு வர்றாராமே குக்கர் கட்சியின் தலைமையானவர்..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகருக்கு அவ்வப்போது குக்கர் கட்சி தலைமையானவர் வந்து செல்கிறாராம்.. சமீபகாலமாக, மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளின் திருமண நிகழ்ச்சி, ஆலோசனை கூட்டங்களிலும் அவ்வப்போது தலையை காட்டிவிட்டு செல்கிறாராம்.. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், குக்கர் கட்சி தலைமை மலைக்கோட்டை மாநகரில் உள்ள சில தொகுதிகளில் நிற்க சீட் கேட்க முடிவு செய்துள்ளதாம்.. இதற்கான வேலையில்தான் குக்கர் தலைமையானவர் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளாராம்... இதற்காக மலைக்கோட்டை மாவட்டத்தில் 2 தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்திக்கிட்டு வர்றாராம்.. ஆனால், அவருக்கு கூட்டணியில் சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக கூட்டணி கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மீண்டும் மேலிட தூதர் வருகையால் புதுச்சேரி தே.ஜ. அணியில் சலசலப்பு நீடிக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆன்மிகத்துக்கு பெயர்போன புதுச்சேரியில் தேர்தல் அரசியல் கூத்துகள் ஆரம்பமாகி உள்ளதாம்.. புல்லட்சாமியை கூட்டணியில் தொடர வைக்க தாமரையோ டெல்லி பவரை பயன்படுத்தி ஆங்காங்கே தடை போட்டு வைத்துள்ளதாம்.. கடைசியாக சுகாதார இயக்குனர் நியமனத்தில் யூனியன் நிர்வாகிக்கும், புல்லட்சாமிக்கும் மோதல் வெடித்ததாம்.. டென்ஷனாகி ராஜினாமா முடிவுடன் வீடு திரும்பிய புல்லட்சாமி சாமியார் ஒப்புதலுக்கு காத்திருந்தாராம்.. தகவல் கசிந்ததும் தாமரை இலை விஐபிக்கள் அடுத்தடுத்து வீடுதேடி சமாதான முயற்சி செய்தார்களாம்.. ஆனால் டெல்லி வரை இந்த பரபரப்பு தொற்ற சமாதான தூதராக மீண்டும் மேலிட பார்வையாளர் வந்துள்ளாராம்.. ஏற்கனவே தாமரைக்குள் நீடித்த கோஷ்டிகளை சமாளிக்க வந்த தூதர், அதை முடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில் தற்போது புதுசாக கூட்டணி கட்சி பஞ்சாயத்தும் வந்துள்ளதால் தாமரையை புல்லட்சாமியின் ஜக்கு தாங்குமா என்ற கேள்வி உள்ளூர் அரசியலில் பரவலாக எழுந்துள்ளதாம்.. பதிலடியாக மாநில அந்தஸ்து கோரிக்கையை புல்லட்சாமி தரப்பு பிரதிநிதிகள் தொடர்ந்து முன்னெடுக்க, மறுபுறமோ வழக்கம்போல டென்னிஸ் ஆடி சுபநிகழ்ச்சிகளுக்கு கூலாக சென்று வந்தபடி உள்ளாராம் புல்லட்சாமி.
புதுச்சேரி அரசியல் நகர்வுகளில் அடுத்தடுத்த உரசல்கள் மாற்று அணி பாதைக்கு வழிவகுக்கலாம் என்பதால் சலசலப்பு நீடிக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ேரஷன் கடைகளுக்கு தரமற்ற அரிசியை அனுப்பி வைக்கக் கூடாது என்று கோரிக்கை குரல் ஒலிக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் அரிசி தெலங்கானா, ஆந்திரா, சட்டீஸ்கர், அரியானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் திருவாரூர், தஞ்சாவூர் உள்பட டெல்டா மாவட்டங்களில் இருந்து ரயில்கள் மூலம் வருகிறதாம்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு ஒதுக்கீடுபடி 1300 டன் அரிசி அரியானாவில் இருந்து நாகர்கோவில் வந்திருக்கு.. ரயில் மூலம் வந்த அரிசி தரமற்றதாக இருந்ததை தொடர்ந்து அந்த அரிசியை மீண்டும் அரியானாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாம்.. இந்நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, ரயிலில் வந்த அரிசி மூடைகள் லாரிகளில் இறக்கப்பட்டு குமரி மாவட்டத்தில் உள்ள தமிழக நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம்.. அந்த கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட அரிசி மூடைகள் தரமற்றதாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. குமரி மாவட்டத்திற்கு வந்த அரிசி தரமற்ற நிலையில் அதனை திருப்பி அனுப்பாமல் கிடங்குகளுக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிடங்குகளில் இருந்து தரமற்ற அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கக் கூடாது எனவும் கோரிக்கை குரல் ஒலிக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலைப்பகுதிகளுக்கு படையெடுக்கும் கரைவேட்டிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதாமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ மாவட்டத்தின் மலைப்பகுதிகளுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகளின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறதாம்.. இங்குள்ள மலைப்பகுதியான ஆண்டை குறிக்கும் மறுசொல் ஊர் அருகே 2 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களின் பூசாரிகள் சொல்லும் குறி அப்படியே நடப்பதாக சுற்றுவட்டார பகுதிகளில் நம்பப்படுகிறது.
குறிப்பாக அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பதாக பரபரப்பாக பேசப்படுவதால், எப்போதுமே கரை வேட்டிகள் இங்கு அதிகளவு வருவது வழக்கம்.. தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, கிளை நிர்வாகிகள் முதல் மாவட்ட செயலாளர் வரை வந்து செல்கிறார்களாம்.. தனக்கு சீட் கிடைக்குமா? வெற்றி வாய்ப்பு உண்டா என்பது குறித்து முக்கிய பிரமுகர்கள் ரகசியமாக வந்து கேட்டு செல்கின்றனராம்.. குறிப்பாக மாம்பழ மாவட்ட பகுதியை சேர்ந்த இலைக்கட்சியினர் தான் அதிகளவில் வருகிறார்களாம்.. இவர்கள் தங்களுக்கு சாதகமாக எல்லாம் நடக்க வேண்டி, படையல் போட்டு விருந்து ஏற்பாடுகள் செய்கின்றனராம்.. ஞாயிற்றுக்கிழமை இக்கோயில்களில் கூட்டம் கட்டி ஏறுகிறது. கார்கள் அணிவகுப்பு வைக்குமளவுக்கு கரை வேட்டிகள் கும்பலாக வருகின்றனராம்.. தேர்தல் நெருங்க நெருங்க கூட்டம் கூடும் என்பதால் இப்பகுதி மலைக்கிராம மக்கள் இப்பவே கண்ணை கட்டுதே என புலம்புகின்றனர்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.