விலை மதிப்பில்லா பழங்கால பொருட்கள் அபேஸ் பாரிஸ் அருங்காட்சியகத்தில் 4 நிமிடத்தில் நடந்த துணிகர கொள்ளை: கொள்ளையர்கள் குறித்து எந்த துப்பும் இல்லை
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற லூவர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. உலகிலேயே அதிக பார்வையாளர்கள் வந்து செல்லும் இந்த அருங்காட்சியகத்தில் தான் மிகப்பிரபலமான மோனலிசா ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் அரச குடும்பத்து ஆபரணங்கள் கடந்த 19ம் தேதி திருடு போயுள்ளன. அதுவும் பட்டப்பகலில்.
அருங்காட்சியகம் காலை 9.30 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில் 9.40 மணிக்குள் இந்த கொள்கை சம்பவம் நடந்துள்ளது. அருங்காட்சியகத்திற்கு அருகே இயந்திர ஏணி பொருத்தப்பட்ட லாரியை கொண்டு வந்த கொள்ளையர்கள், அதன் மூலம் பால்கனிக்கு வந்து அப்போலா காட்சி கூடத்திற்குள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த ஒரு பெட்டியை அவர்கள் தூக்கிச் சென்றுள்ளனர்.
அதில் 3ம் நெப்போலியன் மனைவியும் அரசியுமான யூஜினிக்கு சொந்தமான கிரீடம், அணிகலன்கள், அரசர் மேரி லூயிசுக்கு சொந்தமான மரகத நெக்லஸ், மரகத காதணிகள் மற்றும் பிற அரசிகளுக்கு சொந்தமான வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் ஆகியவை இருந்துள்ளன. இவை விலைமதிப்பில்லாதவை என பிரான்சின் கலாச்சார அமைச்சர் ரசின்டா டடி கூறி உள்ளார். இவற்றில், அரசி யூஜினியின் கிரீடம் உள்ளிட்ட 2 பொருட்கள் அருங்காட்சியக வளாகத்தில் கிடந்தது.
இந்த மீட்கப்பட்ட கிரீடத்தில் 1,354 வைரக்கற்களும், 56 மரகத கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் வெறும் 4 நிமிடத்தில் இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தி எச்சரிக்கை அலாரம் ஒலித்ததும் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பி உள்ளனர். இதுவரை அவர்கள் குறித்த ஒரு துப்பும் கிடைக்காமல் பிரான்ஸ் அரசு தவிக்கிறது.