நடப்பாண்டு பண்டிகை சீசனில் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான தள்ளுபடிகள் அமோகமாக இருந்தன. இதனால் புதிய மொபைல்களை வாங்கியவர்கள் தங்களது பணத்தை கணிசமாக சேமிக்க முடிந்தது. ஆனால், குறைந்த விலையில் அல்லது சலுகைகளுடன் மொபைல்களை வாங்கிய சீசன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. அதோடு மட்டுமின்றி, இனி புதிய மொபைல் வாங்குபவர்கள் அதிக விலை கொடுக்க தயாராக வேண்டும் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. 2025ம் ஆண்டின் இறுதிக்குள் மற்றும் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் சில புதிய மொபைல்கள் ஃபிளாக்ஷிப் கிரேடிற்கு செல்ல உள்ளன. மேலும், நிறுவனங்களுக்கு அவற்றின் விலைகளை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று அறிக்கை கூறுகிறது. ஐபோன் 16 அல்லது பிக்சல் 9 போன்ற மாடல்களை பலரும் இந்த பண்டிகை காலத்தில் தள்ளுபடி விலையில் வாங்கியிருக்கலாம்.
ஆனால், பண்டிகை சீசன் முடிந்துள்ள நிலையில் மொபைல்களின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. Moneycontrol-ன் அறிக்கையின்படி பண்டிகை சீசனுக்கு பிறகு மொபைல்களின் விலைகள் ஏற்கனவே ரூ.2,000 உயர்ந்துள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் புதிய மொபைல்களின் விலைகள் முந்தைய வெர்ஷனைவிட ரூ.6,000-க்கும் அதிகமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இவ்வளவு பெரிய விலை உயர்வுக்கு மொபைல்களில் கொடுக்கப்படும் மெமரி சார்ந்த பாகங்களின் விலை உயர்வு, விநியோக சங்கிலி சிக்கல்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற பிரச்னைகள் காரணம் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதேபோல், மொபைல்களில் கொடுக்கப்பட்டு வரும் AI அம்சங்கள் மீதான வாடிக்கையாளர்களின் ஆர்வமும் அவற்றை விலை உயர்ந்ததாக மாற்றுவதில் ஒரு பெரிய பங்கை வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒன்பிளஸ், ரியல்மி, விவோ மற்றும் பல நிறுவனங்கள் விரைவில் தங்கள் புதிய பிரீமியம் மொபைல்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த உள்ளன.
இவற்றின் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என ஆர்வம் அதிகரித்து உள்ளது. விவோ, ஒப்போ மற்றும் சாம்சங் போன்ற பிராண்டுகள் ஏற்கனவே தங்கள் மிட்-ரேஞ்ச் பட்ஜெட் மொபைல்களின் விலையை திருத்தி அமைத்துள்ளதாகவும், மற்ற நிறுவனங்களும் விரைவில் விலையை உயர்த்தக்கூடும் என்றும் அறிக்கை கூறுகிறது. பண்டிகை கால விற்பனை, வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கலாம். ஆனால், அடுத்தடுத்து மொபைல்களின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டால், வாங்குபவர்கள் தங்கள் அடுத்த பிரீமியம் போன் வாங்குவதற்கு அல்லது அப்கிரேட் செய்வதற்கு முன்பு சில காலம் காத்திருக்கலாம். எனினும், ஆப்பிள் நிறுவனம் தனது டிவைஸ்களின் விலையை உயர்த்தாமல் சமீபத்திய ஐபோன் 17 மற்றும் பழைய ஐபோன் மாடல்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.


