Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முந்தைய ஆதீனத்தின் சமாதி முன் அமர்ந்து மதுரை ஆதீனத்துக்கு எதிராக தம்பிரான் திடீர் போராட்டம்: இளைய ஆதீனமாக ஏற்க மறுப்பதாக குற்றச்சாட்டு

மதுரை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக தம்பிரான் ஒருவர் முந்தைய ஆதீனத்தின் சமாதி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக 2023, ஆகஸ்ட் 23ம் தேதி ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். மேலும், தன் மீது கொலை முயற்சி நடந்ததாக குறிப்பிட்டு, மத மோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து சமீபத்தில் பெரிய கண்டனத்திற்கும் ஆளானார்.

இந்நிலையில், மதுரை ஆதீனத்தைக் கண்டித்து, மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள முன்னாள் ஆதீனமான மறைந்த 292வது ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சமாதி முன்பு விஷ்வலிங்க தம்பிரான் என்பவர் நேற்று காலை திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இன்றைய மதுரை ஆதீனம் இளைய ஆதீனமாக தம்மை ஏற்காததை கண்டித்தும், தன்னிச்சையாக செயல்படும் அவர் பதவி விலகக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகத் ெதரிவித்தார்.

இதுகுறித்து விஷ்வலிங்க தம்பிரான் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் 2018, ஜூலை 6ம் தேதி மதுரையில் 292வது ஆதீனம் அருணகிரிநாதரின் கரங்களால் தீக்சை பெற்று தம்பிரான் சாமியாக சேவை செய்து வருகிறேன். 292வது ஆதீனத்தின் விருப்பப்படி அடியேன் அடுத்த வாரிசாக (இளைய ஆதீனம்) வரவேண்டும். இதற்கு தற்போதுள்ள 293வது ஆதீனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தன்னிச்சையாக செயல்படும் அவர், வேறு ஒருவருக்கு பட்டம் சூட்ட திட்டமிட்டிருக்கிறார். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும், தருமபுரம் ஆதீனத்தின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும் என்பது ஆதீனக் கட்டளை. எனவே தற்போதைய ஆதீனம் தருமபுரம் ஆதீனத்துடன் கலந்து ஆலோசனை செய்து என்னை அடுத்த வாரிசாக நியமிக்க வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, மதுரை தெப்பக்குளம் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விஷ்வலிங்க தம்பிரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். ஆதீனத்துக்கு எதிராக, அங்குள்ள தம்பிரானே போராட்டம் நடத்திய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.