Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிபர் டிரம்பின் கடும் எதிர்ப்பை மீறி நியூயார்க் நகர மேயராக இந்திய வம்சாவளி முஸ்லிம் ஜோரன் மம்தானி வென்று சாதனை

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க், சின்சினாட்டி, அட்லான்டா, டெட்ராய்ட், ஜெர்சி, பிட்ஸ்பர்க், மின்னியாபோலிஸ் மற்றும் பப்பலோ ஆகிய நகரங்களுக்கான மேயர் தேர்தல் கடந்த செவ்வாய்கிழமை நடந்தது. வாக்குப்பதிவு இரவு 9 மணிக்கு முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் அதிகாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அமெரிக்காவின் முக்கிய பொருளாதார நகரமான நியூயார்கின் முடிவு பலராலும் கவனிக்கப்பட்டது.

இங்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜோரன் மம்தானியும், ஆளும் குடியரசு கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும், முன்னாள் ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோ சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்ற அதிபர் டிரம்ப், தனது கட்சி வேட்பாளருக்கு வாக்கு கேட்பதை விட, மம்தானிக்கு யாரும் வாக்களிக்க கூடாது என பிரசாரம் செய்தார். கருத்துக்கணிப்பில் மம்தானி, குவோமோ இடையே தான் போட்டியிருக்கும் என கூறப்பட்ட பிறகு, ‘குவோமோவுக்கு கூட ஓட்டு போடுங்கள், மம்தானிக்கு ஓட்டு போடாதீர்கள்.

அதையும் மீறி மம்தானி வென்றால் நியூயார்க் நகருக்கான அடிப்படை நிதியை மட்டுமே ஒதுக்குவேன். சிறப்பு நிதி எதுவும் கிடைக்காது’ என அதிபர் டிரம்ப் நகர மக்களுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். இந்த சூழலில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளுடன் ஜோரன் மம்தானி மகத்தான வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய அமெரிக்க திரைப்பட இயக்குநரான மீரா நாயர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கொலம்பியா பல்கலை பேராசிரியர் மஹ்மூத் மம்தானி தம்பதியினரின் மகனான ஜோரன் மம்தானி நியூயார்க் மேயராகும் முதல் இந்திய வம்சாவளி, தெற்காசியாவை சேர்ந்தவர், முதல் ஆப்ரிக்கர், நூற்றாண்டுகளில் இளம் மேயர் (34 வயது) என பல சாதனைகளுடன் டிரம்பின் எதிர்ப்பை மீறி வென்றுள்ளார். நியூயார்க்கின் 111வது மேயராக மம்தானி 2026 ஜனவரி மாதம் பதவியேற்பார்.

தேர்தல் வெற்றிக்குப் பின் ப்ரூக்ளினில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மம்தானி, ‘‘நான் ஒரு முஸ்லிம்.

முஸ்லிம் என்பதற்காக நான் மன்னிப்பு கேட்க மறுக்கிறேன். இந்த தருணத்தில், இந்தியா சுதந்திரமடைந்த நாளில் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை நினைவுக்கு வருகிறது. ‘நாம் பழையதிலிருந்து புதியதற்கு அடியெடுத்து வைக்கும் போது, ஒரு யுகம் முடிவடையும் போது, நீண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு தேசத்தின் ஆன்மா வெளிப்படும் போது வரலாற்றில் ஒரு தருணம் அரிதாக வரும்’ என்றார்.

அதே போல இன்று நாம் பழையதிலிருந்து புதிய நியூயார்க்கை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம். இந்த நகரத்தை புலம்பெயர்ந்தவர்கள் உருவாக்கினர். அவர்களே வலுவாக்கினர். இன்று ஒரு புலம்பெயர்ந்தவரால் இந்த நகரம் வழிநடத்தப் போகிறது. இனி நியூயார்க் புலம்பெயர்ந்தவர்களின் நகரமாகவே இருக்கும்.

அதிபர் டிரம்ப் டிவியில் இதை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு 4 வார்த்தைகள் உள்ளன, ‘டிவி சத்தத்தை அதிகமாக வையுங்கள்’’’ என்று மம்தானி கூறியதும் அவரது ஆதரவாளர்கள் பெரும் ஓசையை எழுப்பினர். இதே போல, நியூ ஜெர்ஸி ஆளுநர் தேர்தலிலும் டிரம்பின் ஆதரவு பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் ஜாக்கை வீழ்த்தி, ஜனநாயக கட்சியின் மைகி ஷெர்ரில் வெற்றி பெற்றார்.

* துணை அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரை வென்ற இந்தியர்

ஓஹியோ மாகாணத்தின் சின்சினாட்டி நகர மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி.வான்சின் ஒன்றுவிட்ட சகோதரரும் குடியரசு கட்சி வேட்பாளருமான கோரி போமனை தோற்கடித்து ஜனநாயக கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளி அப்தாப் புரேவல் 2வது முறையாக வெற்றி பெற்றார். இதே போல, விர்ஜினியா துணை நிலை ஆளுநர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளி கஸலா ஹஸ்மி வெற்றி பெற்றார். இதன் மூலம் விர்ஜினியாவின் முதல் முஸ்லிம் ஆளுநராகி உள்ளார்.