Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அமைதிக்கான நோபல் பரிசு அதிபர் டிரம்ப்புக்கு கிடைக்கவில்லை: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு கிடைத்தது

ஆஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது, 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்குதான் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும என்று கூறி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. டிரம்ப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாததை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த 1901ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கான நோபல் பரிசு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த திங்கட்கிழமை முதல் வெளியாகி வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நேற்று உலகமே எதிர்பார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நோபல் அமைதிப் பரிசுக்காக, 338 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 244 தனிநபர்கள் சார்ந்தது, 94 அமைப்புகள் சார்ந்தது. வழக்கமாக நோபல் அமைதி பரிசு என்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்காது. ஆனால், இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசை தனக்குத் தான் வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக சொல்லி வந்தது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட மொத்தம் 8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு கண்டிப்பாக தந்தே ஆக வேண்டும் என்று டிரம்ப் தினமும் பேட்டியளித்ததால் பரபரப்பு அதிகமானது.

கடந்த புதன்கிழமை வௌ்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வரலாற்றில் இதுவரை வேறு யாரும் இத்துனை போர்களை நிறுத்தி இருக்க மாட்டார்கள். ஆயினும், நர்வேஜியன் கமிட்டி எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை தராமல் இருப்பதற்கான காரணங்களை எப்படியாவது தேடி கண்டுபிடிக்கும்” என வௌிப்படையாக டிரம்ப் புலம்பி இருந்தார். அத்துடன், அமைதி அதிபர் என்ற அடைமொழியுடன் கூடிய டிரம்ப்பின் புகைப்படம் ஒன்றை வெள்ளை மாளிகை இருதினங்களுக்கு முன் வௌியிட்டிருந்தது. மேலும் பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் டிரம்ப் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்திருந்தன.

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நேற்று மதியம் வெளியிடப்பட்டது. “2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக அயராது போராடி, நாட்டில் சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் மலர போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்படுகிறது.” என நோபல் கமிட்டியின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரிட்நெஸ் விருது அறிவிப்பை வெளியிட்டார். அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படாததற்கு வௌ்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் சியூங் தன் சமூக வலைதளத்தில், “அதிபர் டிரம்ப் மனிதாபிமானம் மிக்கவர், அவரை போல் அமைதியை விரும்புபவர்கள் யாருமிருக்க மாட்டார்கள். டிரம்ப் தொடர்ந்து பல போர்களை தடுத்து நிறுத்துவார். அமைதி ஒப்பந்தங்களை செய்து, உயிர்களை காப்பாற்றுவார். நோபல் பரிசு குழுவினர், அமைதியை விட அரசியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருபவர்கள் என்பதை நிரூபித்து விட்டனர்” என விமர்சித்துள்ளார்.