Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

எலியும் பூனையுமாக சண்டை போட்ட அதிபர் டிரம்ப்-மேயர் மம்தானி மாறி மாறி பாராட்டி புகழ்ந்தனர்: வெள்ளை மாளிகை சந்திப்பில் ருசிகரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நியூயார்க் நகர மேயர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோரான் மம்தானியை அதிபர் டிரம்ப் கடுமையாக தாக்கி பேசினார். ‘எங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை. மம்தானிக்கு ஓட்டு போடாதீர்கள். அவர் வந்தால் நியயூார்க்கை சர்வ நாசமாக்கிவிடுவார்’ என டிரம்ப் நியூயார்க் நகர மக்களை எச்சரித்தார். டிரம்பை கொடுங்கோலர் என மம்தானி குற்றம்சாட்டினார். இறுதியில் தேர்தலில் வெற்றி பெற்ற மம்தானி, நியூயார்க் மேயராகும் முதல் இந்திய வம்சாளி, முதல் இஸ்லாமியர் என பல சாதனைகள் படைத்தார். வரும் ஜனவரி 1ம் தேதி மம்தானி மேயராக பதவியேற்க உள்ள நிலையில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்பை அவர் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு களேபரமாக இருக்கப் போகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக சுமுகமாக நடந்து முடிந்தது. சந்திப்புக்கு பின் டிரம்ப், மம்தானி கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது டிரம்ப், ‘‘நாங்கள் சிறந்த சந்திப்பை நடத்தினோம். இது மிகவும் பயனுள்ள சந்திப்பு. எங்களுக்கு ஒரே ஒரு விஷயம் பொதுவானது. நியூயார்க் நகரை மிகச்சிறந்ததாக்க வேண்டுமென்பதே எங்கள் இருவரின் விருப்பம். அந்த வேலையை மம்தானியால் சிறப்பாக செய்ய முடியும்’’ என்றார்.

மம்தானி பேசுகையில், ‘‘அதிபர் டிரம்பை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஏனென்றால் இந்த சந்திப்பில் எங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பற்றி பேசவில்லை, அதில் கவனம் செலுத்தவில்லை. அதற்கு பதிலாக நியூயார்க் மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகள் குறித்த எங்கள் ஒன்றுபட்ட நோக்கத்தை விவாதித்தோம். இது ஒரு சிறந்த சந்திப்பு’’ என்றார்.

* மம்தானி பதிலளிக்க உதவிய டிரம்ப்

செய்தியாளர்கள் சந்திப்பில் ஒருவர், ‘‘பிரசாரத்தின் போது நீங்கள் அதிபர் டிரம்ப் ஒரு பாசிசவாதி என்றீர்கள். இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன?’’ என மம்தானியிடம் கேட்டார். அதற்கு மம்தானி, ‘‘அதைப் பற்றி சொல்வதானால்…’’ என தர்மசங்கடத்துடன் யோசித்த நிலையில் அதிபர் டிரம்ப், ‘‘இதற்கெல்லாம் விளக்கம் சொல்வதற்கு பதிலாக ஆம் என கூறிவிடுங்கள். அதுதான் சுலபம். நான் ஒன்றும் கண்டுக்க மாட்டேன்’’ என்றார்.

* இந்தியா-பாக். போர் இங்கேயும் விடவில்லை

‘இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்’ என அதிபர் டிரம்ப், மம்தானியுடனான சந்திப்பு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், ‘‘நான் இந்தியா, பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியிருக்கிறேன்’’ என்றார். இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை டிரம்ப் இவ்வாறு கூறியிருக்கும் நிலையில், இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

* டிரம்ப் விசுவாசி கிரீன் ராஜினாமா

குடியரசு கட்சியின் பெண் எம்பியும், டிரம்பின் தீவிர விசுவாசியாகவும் இருந்த மார்ஜோரி டெய்லர் கிரீன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு, வரும் ஜனவரி 6ம் தேதியுடன் தான் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். குழந்தைகள் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை வெளியிடுவதில் டிரம்ப்-கிரீன் இடையே விரிசல் ஏற்பட்டது.