தமிழ்நாட்டில் 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வந்தார்: ஆளுநர்,துணை முதல்வர் வரவேற்றனர்
சென்னை: தமிழ்நாட்டில் 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, மைசூரில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றனர். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழ்நாட்டிற்கு இரண்டு நாட்கள் பயணமாக, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் நேற்று பகல் 11.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் திரவுபதி முர்முவை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மேயர் பிரியா, டி.ஆர்.பாலு எம்பி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு காரில் ஜிஎஸ்டி சாலை வழியாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த சிட்டி யூனியன் பேங்க், 120வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஜனாதிபதி முர்மு வருகையை ஒட்டி, சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வர்த்தக மையம் செல்லக்கூடிய ஜிஎஸ்டி சாலை, கத்திப்பாரா, மேம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு அவரது வாகனம் கடந்து செல்லும் வரையில் போக்குவரத்துநிறுத்தப்பட்டன.