ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
புதுடெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் தற்போது வரையில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்திருந்தது.. ஆனால் அவர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்த நிலையில் நீட் விளக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதி அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் இது தொடர்பான உத்தரவின் நகலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் தரப்பிலிருந்து தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து நீட் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன் மற்றும் நிஷா ரோத்தகி ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘தமிழ்நாடு சட்டப்பேரவையால் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார். நீட் தேர்வின் அழுத்தத்தால் தமிழ்நாட்டில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்த துயர சம்பவம் என்பது எங்களது மாநிலத்தை மட்டும் அல்ல நாடு முழுவதும் இது போன்ற மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே நீட் தேர்வு விலக்கு என்ற விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். அதேபோன்று இந்த விவகாரத்தில் மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசுத் தலைவரின் நடவடிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


