Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அதிபர் டிரம்ப் போட்ட கையெழுத்தால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்..? மத்திய கிழக்கில் மாறும் போர் சூழல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் போட்ட கையெழுத்தால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் சூழல் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலும், பாலஸ்தீனம் இடையே 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் படைகள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போது போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்கா தயாரித்துள்ள ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்பு ஒப்பு கொள்ளவில்லை.

ஹமாஸ் அமைப்புக்கு 3 நாள் காலக்கெடுவை டிரம்ப் விதித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, கடந்த மாதம் 9ம் தேதி நள்ளிரவில் திடீரென கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த கலில் அல் ஹயா என்பவர் பதுங்கியுள்ளதாக கருதி, இஸ்ரேல், தனது போர் விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதில் கலில் அல் ஹயா தப்பினார். ஆனால் அவரது மகன் ஹமாம் அல் ஹயா, அவரது அலுவலக இயக்குனர் ஜிகாத் லுபத், 3 பாதுகாவலர்கள், ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது.

அமெரிக்காவுக்கு, கத்தார் - இஸ்ரேல் நல்ல நட்பு நாடுகள். தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை முறியடிக்க அமெரிக்கா உதவும் என்ற நம்பிக்கை கத்தாருக்கு உள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் விமானப்படை கத்தாரில்தான் உள்ளது. இப்படியான சூழலில் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலை டிரம்ப் ஏற்கவில்லை. இது தொடர்பாக கத்தார் அமெரிக்கா மீது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இஸ்ரேல் தாக்குதல் பற்றி அமெரிக்கா அறிந்திருந்தும் தங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு தொலைபேசியில் தொடர்ந்து கடிந்து கொண்டார். அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கத்தார் தலைநகர் தோஹா மீதான தாக்குதலை டிரம்ப் கண்டித்தார். மேலும் கத்தார் பிரதமரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்தார். இதையடுத்து வேறு வழியின்றி டிரம்ப் உடனான சந்திப்பிலேயே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசியில் கத்தார் பிரதமர் செய்க் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியை தொடர்பு கொண்டு, தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார். மேலும் கத்தார் மீது தாக்குதலை நடத்தமாட்டேன் எனவும் நெதன்யாகுவை சொல்ல வைத்தார் டிரம்ப். இந்த சம்பவம் தற்போது, நெதன்யாகுவிற்கு மான பிரச்னையாக மாறியுள்ளது. இதனால் அமெரிக்கா மீது இஸ்ரேல் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் கத்தார் நலன் சார்ந்த ஒரு உத்தரவில் கடந்த 28ம் தேதி டிரம்ப் போட்ட ஒரு கையெழுத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது, கத்தாரில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. இதனால் இந்த கையெழுத்தை டிரம்ப் போட்டார். அந்த உத்தரவில், கத்தாரின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. இதனால் கத்தாரை குறிவைத்து எந்த நாடு தாக்கினாலும் அதன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கத்தார் மீதான தாக்குதலை அமெரிக்கா, தனது நாட்டின் மீதான தாக்குதலாக கருதி ராணுவ நடவடிக்கையை தொடங்கும் என்பதுதான் இந்த உத்தரவின் முக்கிய சாராம்சம்.

இதுதான் தற்போது இஸ்ரேலுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. ஏனென்றால் கத்தாரை, இஸ்ரேல் எப்போதுமே ஆபத்தான நாடாகத்தான் பார்க்கிறது. இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹமாஸ் அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அவ்வப்போது கத்தாரில்தான் பதுங்கி வருகின்றனர். இஸ்ரேலுக்கு எதிரான செயல்பாடுகளை அங்கு வைத்து திட்டமிட்டுதான் சதிவேலைகளை அரங்கேற்றுவதாக நெதன்யாகு கூறி வருகிறார். இப்படியான சூழலில்தான் கத்தார் மீண்டும் ஹமாஸ் அமைப்பினருக்கு அடைக்கலம் கொடுக்கலாம். இதனால் இஸ்ரேலும், கத்தாரை தாக்கவும் செய்யலாம். இது நடக்கும் பட்சத்தில் கத்தாருக்கு ஆதரவாக இஸ்ரேலை, அமெரிக்கா தாக்கும் வகையில் இந்த உத்தரவு உள்ளது.

இருப்பினும் இஸ்ரேலை அவ்வளவு எளிதாக அமெரிக்கா சீண்டாது. தற்போதைய கையெழுத்து என்பது கத்தாரை சமாதானப்படுத்தும் வகையில் டிரம்ப் போட்டிருக்கலாம். மற்றபடி இஸ்ரேலும், அமெரிக்காவும் எப்போதுமே நல்ல நட்பு நாடாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள். ஆனாலும்கூட மத்திய கிழக்கில் இஸ்ரேலை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் எதிர்த்து வருகின்றனர். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பக்கப்பலமாக இருக்கிறது. ஆனால் கத்தாரை மையப்படுத்தி டிரம்ப் போட்டுள்ள இந்த உத்தரவு என்பது அமெரிக்காவால் இஸ்ரேலுக்கு ஆபத்தான ஒன்றாகவே பார்க்கப்படுவதையும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் மறக்கவில்லை. இதனால் மத்திய கிழக்கில் போர் சூழல் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.