Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அதிபர் டிரம்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு; வெளிநாட்டு வாகனங்களுக்கு 25% இறக்குமதி வரி விதிப்பு: இந்திய வாகன ஏற்றுமதி பாதிக்கப்படுமா?

வாஷிங்டன்: அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கு 25% வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இந்திய வாகன ஏற்றுமதிக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படாது என்றும், உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 50% வரை வரி விதித்து வரும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் நடுத்தர மற்றும் கனரக லாரிகள் மீது 25% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே மருந்துப் பொருட்கள், எஃகு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்தகட்டமாக கனரக வாகனங்கள் மீதும் தற்போது வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்ட அதிபர் டிரம்ப், ‘நவம்பர் 1ம் தேதி முதல், அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கும் 25% வரி விதிக்கப்படும். இந்த வரிவிதிப்பு, டெலிவரி டிரக்குகள், செமி டிரக்குகள், பள்ளி மற்றும் பொதுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் பொருந்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, அமெரிக்க வர்த்தகத் துறை கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வரிவிதிப்பால் வர்த்தக வாகனங்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவுக்கு அதிக அளவில் லாரிகளை ஏற்றுமதி செய்யும் மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த புதிய வரி, அமெரிக்கா-மெக்சிகோ-கனடா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையால் இந்தியாவின் கனரக வாகன ஏற்றுமதிக்கு நேரடி பாதிப்புகள் ஏதும் இல்லை. ஏனெனில், இந்தியா தரப்பில் அமெரிக்கச் சந்தைக்கு இதுபோன்ற லாரிகளை ஏற்றுமதி செய்வதில்லை. இந்தியா தனது கனரக வாகனங்களை ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கே பெரும்பாலும் ஏற்றுமதி செய்வதால், டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் போன்ற முக்கிய இந்திய நிறுவனங்களின் வர்த்தகத்தில் உடனடி பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இருப்பினும், இந்த வரிவிதிப்பால் சில மறைமுகப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் தாக்கம் இருக்கலாம் என்கின்றனர்.

இந்தியா ஆண்டுக்கு சுமார் 6 முதல் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாகன உதிரிபாகங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதனால், பாரத் ஃபோர்ஜ் போன்ற வர்த்தக வாகனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். ஒருவேளை அமெரிக்காவில் வாகனங்களுக்கான தேவை குறைந்தால், இந்திய நிறுவனங்களின் லாபம் 15 முதல் 20 சதவீதம் வரை குறையக்கூடும். அதேநேரம், இந்தச் சூழல் இந்தியாவிற்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. மாற்றுச் சந்தைகளை நோக்கி ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மூலம் வரிவிலக்கு பெறுவதற்கும் வழிவகுக்கும் என்கின்றனர். மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் அதிக தொழிலாளர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உதிரிபாகங்கள் உற்பத்தியில் இந்தியாவுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.