Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி என 7 பேருக்கு மட்டும் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்: புதிய நடைமுறையை வகுத்தது தமிழ்நாடு அரசு

சென்னை: மாநில அரசு விழாக்களுக்கு வருகை தரும் குடியரசுத்தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில ஆளுநர், முதல்வர் என 7 பேருக்கு மட்டும் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கும் வகையில் புதிய நடைமுறை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் செயலகம், துணை குடியரசுத்தலைவர் செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க மாநில அரசு விழாக்களுக்கு வருகை தரும் மிக முக்கிய நபர்களுக்கு (விஐபி) மரியாதை அணிவகுப்பு வழங்குவது தமிழ்நாடு அரசு முறைப்படுத்தியுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆகிய 7 பேருக்கு மட்டுமே காவல்துறை முழு மரியாதை செலுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு விழாக்கள் ெதாடர்பாக தமிழ்நாட்டிற்கு அதிகாரப்புர்வ வருகையின்போது இந்த 7 பேருக்கு மட்டும் அணிவகுப்பு மரியாதை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,‘காவல் துறை பயிற்சி கையேட்டின்படி, மரியாதை செலுத்தும் நபரின் வயது மற்றும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும். அதன்படி, குடியரசுத் தலைவராக இருந்தால், அவரது காவலரின் அமைப்பு மற்றும் பலம் 150 பேராக இருக்கும். துணை குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர், ஆளுநராக இருந்தால் தலா 100 பணியாளர்களும், முதலமைச்சராக இருந்தால் அல்லது ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்தால் தலா 50 பணியாளர்களும் கொண்ட அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.

இந்த நடவடிக்கை தேவையற்ற பணியாளர்களை பணிநீக்கம் செய்வதை தவிர்ப்பதையும், அதே நேரத்தில் மிக முக்கிய விஐபிக்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டு முறைகள் மற்றும் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் செய்யப்படவில்லை. மரியாதைக்குரிய அணிவகுப்புக்கான அமைப்பு போலீஸ் ஆராய்ச்சி பணியகத்தால் வெளியிடப்பட்ட போலீஸ் பயிற்சி கையேட்டின் படி இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.