ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் தரிசனம்: பம்பையில் இருந்து இருமுடி கட்டி 18ம் படி ஏறிச்சென்றார்
திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று சபரிமலையில் தரிசனம் செய்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்ற அவர் பம்பையில் இருமுடிக் கட்டு நிரப்பி 18ம்படி ஏறி ஐயப்பனை தரிசித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை 7.30 மணியளவில் அவர் திருவனந்தபுரம் விமானப்படை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் சபரிமலைக்கு புறப்பட்டார்.
முதலில் நிலக்கல்லில் இறங்கி பின்னர் அங்கிருந்து ஜனாதிபதி காரில் பம்பை செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலநிலை காரணமாக கோன்னியில் பிரமாடம் பகுதியில் உள்ள ஸ்டேடியம் மைதானத்தில் காலை 8.40 மணியளவில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.
பின்னர் இங்கிருந்து கார் மூலம் ஜனாதிபதி பம்பைக்கு புறப்பட்டுச் சென்றார். பம்பை நதியில் கால்களை நனைத்து ஸ்நானம் செய்த பின்னர் கணபதி கோயிலுக்கு சென்றார். அங்கு ஜனாதிபதிக்காக இருமுடிக் கட்டு தயார் செய்யப்பட்டது.
அவருடன் மருமகன் கணேஷ் சந்திரா மற்றும் மெய்காப்பாளர்களான சவுரவ் நாயர், வினய் மாத்தூர் ஆகியோரும் அங்கு வைத்து இருமுடி கட்டினர். பின்னர் அங்கிருந்து 11.30 மணியளவில் ஜீப் மூலம் சன்னிதானத்திற்கு புறப்பட்டு சென்றார். 11.45 மணியளவில் சன்னிதானம் சென்ற ஜனாதிபதி, 18ம் படி முன் தேங்காய் உடைத்து இருமுடிக் கட்டுடன் படி ஏறினார். கோயில் கொடிமரம் அருகே வைத்து சபரிமலை தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் தலைமையில் ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் ஐயப்பனை தரிசனம் செய்தார்.
ஐயப்பனை தரிசித்த பின்னர் கன்னிமூல கணபதி கோயிலிலும், வாவர் சன்னதியிலும் அவர் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த சிறிது நேரத்திலேயே ஜனாதிபதி ஜீப் மூலம் பம்பைக்கு புறப்பட்டு சென்றார். பம்பையில் உள்ள தேவசம் போர்டு விருந்தினர் மாளிகையில் அவர் மதிய உணவு அருந்திய பின் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். 3 மணியளவில் பம்பையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி கோன்னி சென்று , அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் திரும்பினார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கான்கிரீட்டில் புதைந்த ஹெலிகாப்டர் டயர்
சபரிமலை பகுதியில் மழை பெய்து வருவதால் திடீரென ஹெலிகாப்டர் இறங்குவது நிலக்கல்லில் இருந்து கோன்னிக்கு மாற்றப்பட்டது. இங்குள்ள உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவுக்கு பின்னர் தான் ஹெலிப்பேடுக்கான கான்கிரீட் போடப்பட்டது. அந்த பகுதி சரியாக காய்வதற்கு முன்பே ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் தரை இறங்கியது. ஜனாதிபதி உள்பட அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் ஹெலிகாப்டரை சற்று நகர்த்த முயற்சித்தபோது அதன் சக்கரம் காயாமல் இருந்த கான்கிரீட்டில் லேசாக புதைந்தது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சிரமப்பட்டு பஸ்சை தள்ளுவது போல ஹெலிகாப்டரை தள்ளி அப்புறப்படுத்தினர்.
