சென்னை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் இன்று காலை 10.30 மணியளவில் புறப்பட்டு, காலை 11.40 மணியளவில், சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு, சிவப்புக் கம்பளம் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்பு காலை 11.50 மணியளவில், குடியரசுத் தலைவர், சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, காரில் புறப்பட்டு, பகல் 12.10 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டர் செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு விழாவில், ஜனாதிபதி கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
அதன்பின்பு, பகல் 1.35 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர் தங்கி ஓய்வு எடுக்கிறார். தொடர்ந்து, 3ம்தேதி காலை 9.35 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 10.30 மணியளவில் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருவாரூர் செல்கிறார். திருவாரூர் மாவட்டம் நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, உரை நிகழ்த்துகிறார்.
அதன்பின்பு திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் குடியரசுத் தலைவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று, அங்கு சிறப்பு தரிசனம் மேற்கொள்கிறார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில், டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, சென்னை பழைய விமான நிலையத்தில், சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சென்னை பழைய விமான நிலையம் பகுதியில் உள்ள, கார்கோ, கொரியர் அலுவலகங்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய ஓடுபாதை மற்றும் தரைதளம் பராமரிப்பு பணிக்காக ஒப்பந்த தற்காலிக பணியாளர்கள், சென்னை பழைய விமான நிலையம் கேட் வழியாக, பணிக்கு உள்ளே வருவார்கள். அவர்கள் அனைவருக்கும், பலகட்ட சோதனைகள் நடத்திய பின்பே, உள்ளே அனுமதிக்க வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்களை, உள்ளே அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை பழைய விமான நிலைய பகுதியில் சந்தேகத்துக்கிடமாக யாராவது சுற்றுகிறார்களா? என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
ஜனாதிபதி சென்னை வருகையை ஒட்டி, சென்னை பழைய விமான நிலையம் பகுதி முழுவதும், முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை முதல், வருகின்ற புதன்கிழமை இரவு வரையில், 3 நாட்கள் சென்னை பழைய விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் என்று, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.