Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வரலாற்று பொக்கிஷங்களான ஆயிரம் ஆண்டு கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும்

*ஆய்வாளர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

திருவாடானை : திருவாடானை பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழங்கால கல்வெட்டுகளையும், தொன்மையான வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாத்து, பராமரிக்க தமிழக அரசு உடனடியாகச் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழடி, கொடுமணல் போன்ற அகழாய்வுகள் மூலம் தமிழினம் உலகின் மூத்த குடிமக்கள் என்ற வரலாற்றுச் சான்று நிரூபிக்கப்பட்டு வரும் நிலையில், திருவாடானைப் பகுதியிலும் பல கிராமங்கள் இதேபோல் அகழாய்வு செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு பழமையான சிவன், பெருமாள் கோயில்கள் மட்டுமின்றி, மகாவீரர் சிலைகள், புத்தர் சிலைகள் போன்ற பல அரிய வரலாற்றுச் சின்னங்களும் போதிய பராமரிப்பின்றி, வெட்டவெளியில் சிதைந்து கிடக்கின்றன. உள்ளூர் ஆர்வலர்கள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்களின் அயராத முயற்சியால் பல அரிய வரலாற்றுத் தகவல்கள் வெளிக்கொணரப்பட்ட போதிலும், அரசால் முறையாகப் பாதுகாக்கப்படாததால் அவை இயற்கையின் சீற்றத்தால் சிதைந்து வருகின்றன.

திருவாடானையை சுற்றியுள்ள கிராமங்களில் கண்டறியப்பட்டுள்ள பல்வேறு காலங்களைச் சேர்ந்த முக்கியமான வரலாற்றுச் சான்றுகள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். திருவாடானை அருகே உள்ள கள்ளிக்குடி சிவன் கோயில் கல்வெட்டு 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கள்ளிக்குடி அருகே உள்ள சூரம்புளி சிவன் கோயிலில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்டம் அல்லது தலைபலி எனப்படும், தன் தலையைத் தானே அறுத்து உயிர்நீத்த வீரனின் சிலை ஒன்று உள்ளது.

இதேபோல், திருவாடானை அருகே உள்ள மாஞ்சூர் கிராமத்தில் இடிந்து கிடந்த சிவன் கோயில் அருகே சிதைந்த நிலையில் காணப்படும் கல்வெட்டுகள், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. புல்லுகுடி சிவன் கோயில் உள்பிரகாரத்தில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அரும்பூர் கிராமத்தில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே கிராமத்தில் பராமரிப்பின்றி கிடந்த மகாவீரர் சிலைக்கு கிராமப் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கோயில் கட்டிப் பராமரித்து வருகின்றனர். ஆனந்தூர் சிவன் கோயிலில் பழமையான கல்வெட்டுகள் இடிந்து கீழே சிதறிக் கிடக்கின்றன.திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் ஆலயத்தில் அம்மன் சன்னதி அருகே தரையில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், தொண்டி சிவன் கோயில், நம்புதாளை சிவன் கோயில், ஓரியூர் மகாலிங்க சுவாமி கோயில் புல்லூர் மற்றும் ஆக்களூர் போன்ற இன்னும் ஏராளமான பழமை வாய்ந்த வரலாற்றுத் தொடர்புகள் உடைய கிராமங்களும், அங்குள்ள கோயில்களில் உள்ள கல்வெட்டுகளும் நிறைந்துள்ளன.

சமீபத்தில் திருவாடானை அருகே உள்ள கட்டுகுடி கிராமத்தில் 368 ஆண்டுகளுக்கு முந்தைய சேதுபதி காலக் கல்வெட்டு ஒன்று ராமநாதபுரம் தொல்பொருள் ஆய்வு நிறுவன நிறுவனர் ராஜகுருவால் படி எடுத்து ஆய்வு செய்யப்பட்டு, வெளிக்கொணரப்பட்டது.இத்தகைய விலைமதிப்பற்ற வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும், போதிய அக்கறை மற்றும் பராமரிப்பின்றி அழிந்து வருவதால், இவற்றை முறைப்படிப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாகச் சிறப்பு நிதியை ஒதுக்கி, திருவாடானைப் பகுதி முழுவதையும் தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தி, கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளை முறையாகப் பாதுகாக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் வைக்கவும், அவற்றைப் பராமரிக்கவும் தொல்லியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாகும்.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து தமிழர்களின் பெருமையைச் சொல்லும் இச்சாதனைகளை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே, வருங்காலத் தலைமுறைக்கு நமது தொன்மையான வரலாற்றின் சிறப்புகளை பதிவு செய்ய முடியும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவாடானைப் பகுதியின் வரலாற்றுச் சிறப்பைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.