Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெண்ணையாற்று கரையோரத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

*மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் : வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தென்பெண்ணையாற்று கரையோர பகுதிகளில் நீர்வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து கடலூர், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, பூந்தென்றல் நகர், ஓம்சக்தி நகர், மஞ்சக்குப்பம் பாலம், நாணமேடு, குமரப்பன் நகர், அழகியநத்தம் பாலம், மேல்பட்டாம்பாக்கம், பகண்டை, மேல்குமாரமங்கலம், அக்கடவல்லி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனை கருத்தில்கொண்டு இனிவரும் காலங்களில் இதுபோன்று வெள்ளப்பெருக்கு ஏற்படாத வண்ணம் தென்பெண்ணை ஆற்றின் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட கடலூர் பகுதியில் பூந்தென்றல் நகர், ஓம்சக்தி நகர், மஞ்சக்குப்பம் பாலம், நாணமேடு, குமரப்பன் நகர், அழகியநத்தம் பாலம், மேல்பட்டாம்பாக்கம், பகண்டை, மேல்குமாரமங்கலம், அக்கடவல்லி ஆகிய இடங்களில் தென்பெண்ணை கரையோரப் பகுதிகளில் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்கும் பொருட்டு கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளன.

வெள்ளநீரால் பெண்ணையாற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படுவதை தடுத்திடும் பொருட்டு, பெண்ணையாற்றில் பாதிப்பு ஏற்படக்கூடிய தாழங்குடா, குண்டு உப்பலவாடி பகுதிகளில் முதற்கட்டமாக நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பெண்ணையாற்றின் வலது கரையில் ஆர்.சி.சி தடுப்புச்சுவர், சரிவுச்சுவர், மண்திட்டுகளை அகற்றும் பணிகள், மழைநீர் வடிவதற்கு வடிகால் மதகு, கரையை பலப்படுத்தும் பணிகள் போன்ற நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நாணமேடு, குமரப்பன் நகர், அழகியநத்தம் பாலம், மேல்பட்டாம்பாக்கம், பகண்டை, மேல்குமாரமங்கலம், அக்கடவல்லி ஆகிய இடங்களில் வெள்ளநீர் தடுத்திடும் பொருட்டு ரூ.57 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளன.பெண்ணையாற்றில் வெள்ளத்தடுப்பு கரை அமைக்கபடுவதால் ஆற்றில் வரும் அதிகபட்ச வெள்ளநீர் முழுவதும் ஆற்றின் உட்பகுதியிலேயே செல்லும்போது வெள்ளநீரானது குடியிருப்பு பகுதிகளிலும், விளைநிலங்களிலும் புகாமல் பாதுகாக்கப்படுகிறது.

மேலும், தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகள் கொண்டு கூடுதலான உயரத்தில் கரைகளைப் பலப்படுத்தவும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் வருகிற முகத்துவாரங்களை கண்டறிந்து தடுப்பணைகள் கட்டப்படவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது கடலூர் கோட்டாட்சியர் சுந்தரராஜன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரஜினிகாந்த், உதவி பொறியாளர் பாலாஜி உள்பட பலர் உடன் இருந்தனர்.