சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் முதல்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பூத் முகவர்கள் உடன் நேரடி சந்திப்பு- “உள்ளம் தேடி” “இல்லம் நாடி” என்ற பெயரிலும், தொகுதி மக்களுடன் சந்திப்பு- “கேப்டனின் ரத யாத்திரை” “மக்களை தேடி மக்கள் தலைவர்” என்ற பெயரிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இவர் வரும் 3ம் தேதி தனது பிரசாரத்தை கும்மிடிப்பூண்டி தொகுதி ஆரம்பாக்கத்தில் தொடங்குகிறார். தொடர்ந்து, அடுத்த மாதம் 23ம் தேதி மாலை செங்கல்பட்டில் மக்கள் சந்திப்புடன் தனது முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இந்நிலையில் முதல்கட்ட சுற்றுப்பயணத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதாவுடன், தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய் பிரபாகரும் பங்கேற்கிறார் என்று தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.