சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் முதல் கட்ட சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேமுதிக சார்பில் மாநில அளவிலான பிரசாரம் வருகிற 3ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்காக மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் படம் பொருந்திய திறந்த நிலை கேரவன் வாகனத்தை பயன்படுத்த உள்ளோம். பிரசாரம் போலீசாரின் வழிகாட்டுதல்களோடு மக்களிடையே அமைதி, ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும். இதற்காக கட்சி தரப்பில் இருந்து நிர்வாகிகளின் ஒத்துழைப்பு போலீசாருக்கு முழுமையாக வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன். எனவே தேமுதிக பிரசாரத்துக்கு அனுமதி வழங்கி, பிரசாரத்தின்போது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.