சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்ட அறிக்கை: உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நம் கட்சி மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுக்கு வரும்தோழர்கள் ஒழுங்கையும் பாதுகாப்பையும் கடைபிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது தலையாய கடமை. மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம்.
மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழக மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம்.