Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிந்து பெண் சிசுவை கலைக்க டார்ச்சர் மகளுடன் கர்ப்பிணி தற்கொலை: கணவன், மாமனார், மாமியார் உள்பட 4 பேர் கைது

கீழ்பென்னாத்தூர்: கருவில் வளரும் பெண் சிசுவை கலைக்க முயற்சி செய்ததால், குழந்தையுடன் கர்ப்பிணி தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமம் வீரபத்திரன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ், விவசாயி. இவரது மனைவி உமாதேவி(25), மகள் மோகனா (2). இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாயும் கடந்த 24ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற முயன்றதில் இருவரும் பலியானதாக கூறப்பட்டது. ஆனால், உமாதேவியின் தந்தை ஏழுமலை தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கீழ்பென்னாத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. விக்னேஷ் மற்றும் உமாதேவி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் உமாதேவி கர்ப்பமானதால், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டறிய முடிவு செய்தனர். இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் கருவில் இருப்பது பெண் சிசு என தெரிவித்துள்ளனர்.இதனால் விக்னேஷ், மாமனார் ஜெயவேல் மற்றும் மாமியார் சிவகாமி ஆகியோர் உமாதேவியின் கருவை கலைக்க வற்புறுத்தியது மட்டுமில்லாமல் அதே கிராமத்தைச் சார்ந்தவரை அணுகி உமா தேவியின் கருவை கலைக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான உமாதேவி, பெண் குழந்தையுடன் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உமாதேவி, அவரது முதல் பெண் குழந்தை தற்கொலைக்கு காரணமான, கணவர் விக்னேஷ் (27), மாமனார் ஜெயவேல்(58) மற்றும் மாமியார் சிவகாமி(43) மற்றும் கருவை கலைக்க முயற்சிக்க உதவிய அதே ஊரை சேர்ந்த சாரதி(39) ஆகிய 4 பேரை கீழ்பென்னாத்தூர் போலீசார் கைது செய்தனர்.