ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுபிறவி என்று சொல்வார்கள். ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் பிரசவக்காலம் வரையிலும் உடலும் மனமும் ஒரு நிலையில் இருக்காது. ஹார்மோன் மாற்றங்களால் நிறைய உடல்நிலை மாற்றங்களும் ஏற்படும். அதனால் பிரசவத்திற்குப் பிறகு அவளின் உடல்நிலை மேல் அதிக அக்கறை மற்றும் கவனம் கொள்வது மிகவும் அவசியமாகும். அதற்காகவே ஸ்பெஷலாக தயாரிப்பது தான் இந்த பிரசவ லேகியம்.
பிரசவலேகியம் எல்லாம் பழைய காலத்து ஐயிட்டமாச்சே..இப்ப யார் செய்வாங்க? எங்க கிடைக்குது என்று கேட்பவர்கள் பலர். தற்போதைய காலத்திலும் இதை ரொம்ப அர்ப்பணிப்பு உணர்வோட செய்து தர்றாங்க சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சம்சுல் ஹூதா பானு. இதனை மிகவும் சுத்தமான வகையில் இயற்கையான மருந்துப் பொருட்களை பயன்படுத்தி தயாரித்து தருகிறார்கள் குழந்தை பெற்ற பெண்களுக்கு உபயோகப்படும் ஒரு அருமையான தயாரிப்பு இது.
பிரசவ லேகியம் என்பது இளம் தாய்மார்களுக்கு கொடுக்கப்படும் மிக சிறந்த ஒன்று. இதனை மற்றவர்களும் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் பிரசவமான பெண்கள் சாப்பிடும் போது அவர்களின் உடலிலுள்ள கழிவுகள் மற்றும் அழுக்குகள் வெளியேறி உடல் சுத்தமடைய உதவியாக இருக்கும். உடல் பலவீனமாக இருப்பவர்கள் மற்றும் மெனோபாஸில் இருப்பவர்கள் கூட தாராளமாக சாப்பிடலாம். மேலும் இளந்தாய்மார்களுக்கு செரிமானத்தை அதிகரித்து அவர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பிரசவ லேகியம் தயாரிக்கும் முறை குறித்து சொல்கிறார் ஹுதா பானு.இதனை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களும் இயற்கையான மருந்துப் பொருட்கள்தான். மலைப் பூண்டு, தேங்காய்ப் பால், கருஞ்சீரகம், கருப்பட்டி, நல்லெண்ணெய், பாதாம் பருப்பு, ஆளி விதை, ஜாலியா அரிசி, பட்டை, வசம்பு, கிராம்பு ஏலக்காய், பால் பெருங்காயம், வெண் கடுகு, கடுகுருணி, கசகசா, சித்தரத்தை, சதக்குப்பை, மாசிக்காய், ஓமம், கண்டந்திப்பிலி, அரிசிதிப்பிலி, பேராளம்பட்டை, ஜாதிக்காய், அதிமதுரம், விரலி மஞ்சள் போன்ற பல்வேறு பொருட்களை பயன் படுத்தி தயாரித்து தருகிறோம். மேலும் திக்கான தேங்காய் பால் எடுக்க முற்றிய பெரிய ரக தேங்காய்களை பயன்படுத்துவோம். இந்த தேங்காய் பாலிலிருந்து வரும் எண்ணெயில் மருந்துப் பொருட்களை சேர்த்து பக்குவமாய் கிண்டவேண்டும். எல்லா பொருட்களையும் பக்குவமாய் உபயோகப்படுத்த வேண்டும். இதற்கு கடுமையான உழைப்பு தேவை.
இதனோடு இடிமருந்து சேர்த்து இடித்து பயன்படுத்த வேண்டும். இவற்றை இடிக்க ரொம்ப சிரமமாக இருக்கும். தற்போது அதனை ஓரளவு இடித்து மிஷினில் கொடுத்து மொத்தமாக அரைத்தும் பயன்படுத்தலாம். எல்லா மிஷினிலும் இந்த பொருட்களை அரைக்க மாட்டார்கள். அதற்கென சில தனி மெஷின்கள் இருக்கின்றன. மருந்துப் பொருளில் சூடு அதிகமானால் பலன் குறையும். அதே போல், உடன்குடி கருப்பட்டி பாகுதான் எடுக்க வேண்டும். இது பிசுபிசுப்பு தன்மையில்லாத உயர்ரக கருப்பட்டி. இந்த லேகியத்தினை தயாரிக்க நல்ல சுத்தமான செக்கு நல்லெண்ணெய்தான் பயன்படுத்துகிறேன். இதனை தயாரிப்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. நிறைய பொறுமையும் அர்ப்பணிப்பு உணர்வும் தான் தேவை மிக கவனமாய் அக்கறையாய் செய்ய வேண்டும் என்கிறார் ஹூதா.
இதனை குழந்தை பெற்ற பெண்கள் தொடர்ந்து பதினைந்து நாள் அல்லது ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிடுவது சிறந்தது. பிரசவ லேகியத்தினை தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் சாப்பிட்ட பின்பு ஒரு டம்ளர் பால் குடித்தால் மிகவும் நல்லது மட்டுமல்ல கூடுதல் பலன்கள் கிடைக்கும். இதனை சாப்பிடும் தாய்மார்களுக்கு நல்ல பலன்களை கொடுக்க கூடியது. பொதுவாக பெண்களுக்கு பிரசவத்துக்கு பிறகு விரிவடைந்த கருப்பை மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்குச் சுருங்கத் தொடங்கும். இந்த பிரசவ லேகியமானது கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கான ஊட்டச் சத்தினை கொடுக்கும். பிரசவித்த பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது முதல் ஏராளமான நன்மை தரும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் மட்டும் சாப்பிடுவதை தவிர்க்கலாம். மற்றபடி அனைவரும் சாப்பிடலாம்.
- தனுஜா ஜெயராமன்.
