Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

”நிர்மலா சீதாராமன் நன்கு பழக்கம்” பாஜகவில் மாநில பொறுப்பு வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி: சாமியார் வேடமணிந்து ஏமாற்றிய ஆசாமி கைது

ஆவடி: ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (54). இவர், கடந்த 11ம் தேதி ஆவடி காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பது: எனது கார் டிரைவர் சரவணன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்ற வாசு (32) எனக்கு அறிமுகமானார். இவர், திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இவர், என்னிடம் பாஜக பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், திரையுலக கலைஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளை எனக்கு நன்கு தெரியும். உங்களுக்கு வீடு தேவைப்பட்டால் சொல்லுங்கள். இவர்கள் மூலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருகிறேன் என கூறினார். இவரை நம்பி 18க்கும் மேற்பட்டோரிடம் 20 லட்சம் ரூபாய் வரை வாங்கி கொடுத்தேன். ஆனால், என்னை ஏமாற்றிவிட்டார்.

பணம் கொடுத்தவர்கள் என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்கின்றனர். இதனால் நான் மனஉளைச்சலில் உள்ளேன். எனவே, பணம் வாங்கி மோசடி செய்த வாசு மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெகன் தலைமையில் தனிப்படை அமைத்து உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் செல்வவேல், ராஜா, கேசவன் மற்றும் காவலர்கள் தலைமறைவான வாசுவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று திருமுல்லைவாயல் நாகம்மைநகர் பகுதியில் உறவினர் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த வாசுவை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுபோல் கடந்த ஏப்ரல் 9ம்தேதி அதே பகுதியை சேர்ந்த ராமானுஜம் (72) என்பவரும் வாசு மீது திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளேன். என்னுடைய நண்பர் சந்தானம் மூலம் கடந்த 2023ம் ஆண்டு அறிமுகமான வாசு, எனக்கு நிர்மலா சீதாராமன் நன்கு தெரியும். பாஜ கட்சியில் செல்வாக்கு இருப்பதாகவும், மாநில பொறுப்பு வாங்கி தருவதாகவும் என்னிடம் ரூ.70,00,000 கேட்டார். இவரை நம்பி 3.11.2023 முதல் 5.1.2025 வரை ரூ.44,00,000 கொடுத்தேன். ஆனால், இதுவரை பாஜகவில் மாநில பொறுப்பு வாங்கிதராமலும் பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுதரவேண்டும் என கூறியுள்ளார். மேலும் போலி சாமியார் வேடமணிந்து பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்ட பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த படங்களை காட்டி தாசில்தார், போலீஸ் துறையில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.