Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3ம் நாள் பிரமோற்சவம் கிவி, அன்னாசிப்பழங்களால் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம்

*செயல் அதிகாரி பங்கேற்பு

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3ம் நாள் பிரமோற்சவத்தையொட்டி நேற்று உற்சவ மூர்த்திகளுக்கு கிவி, அன்னாசிப்பழங்களால் அலங்காரம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கோடி தேவதைகளையும் அழைத்து வேதமந்திரங்களோடு பிரமோற்சவ கொடியேற்றம் கடந்த 4ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. பிரமோற்சவத்தின் 2வது நாளான நேற்று முன்தினம் காலை 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி முரளி கிருஷ்ணர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, பெரிய சேஷம், சின்ன சேஷம் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி உற்சவ மூர்த்திகள் நான்கு மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக 3ம் நாளான நேற்று காலை மலையாப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடியபடி வீதி உலாவில் பங்கேற்றனர். வீதியுலாவின் போது நான்கு மாட வீதியில் இருப்புறமும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 3ம் நாளான நேற்று கிவி, அன்னாசிப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களில் பின்னப்பட்ட மாலைகள் மற்றும் கிரீடங்களால் உற்சவ மூர்த்திகள் அலங்கரிப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று நடந்த திருமஞ்சனத்தில் ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் ரங்கநாதர் மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்யப்பட்ட பிறகு, மஞ்சள், வெட்டிவேர், ரோஜா இதழ்கள், மஞ்சள் பட்டு நூல், வெள்ளை முத்து, திராட்சை, சந்தனம், துளசி உள்ளிட்ட வண்ணமயமான மாலைகள் மற்றும் கிரீடங்கள் அணிவிக்கப்பட்டன. இதில் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.