பெங்களூரு: பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மஜத முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நூலகத்தில் எழுத்தர் பணி செய்து வருகிறார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி முன்னாள் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா, வீட்டு பணிப்பெண் உட்பட ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிப்படி ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறையில் பணி செய்ய வேண்டும். ஆயுள் தண்டனைக் கைதிகள் சிறைப்பணிகளில் அவர்கள் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற பணிகளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
அந்தவகையில், பிரஜ்வல் ரேவண்ணா தினசரி ரூ.522 சம்பளத்திற்கு சிறை நூலகத்தில் எழுத்தர் பணி செய்துவருகிறார். சிறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘பிரஜ்வல் ரேவண்ணா சிறை நூலக எழுத்தராக பணி செய்கிறார். அவருக்கு ஒருநாளைக்கு ரூ.522 சம்பளம். சிறை விதிப்படி, பிரஜ்வலுக்கு நூலக கிளர்க் பணி வழங்கப்பட்டிருக்கிறது. நூலக ரெக்கார்டுகளை பராமரிப்பதுதான் அவரது வேலை. பிரஜ்வல் நிர்வாகப் பணி செய்வதாக கோரிக்கை விடுத்தார். ஆனால் சிறை நிர்வாகம், அவருக்கு நூலகத்தில் பணி வழங்கியிருக்கிறது’ என்றார். வாரத்திற்கு குறைந்தது 3 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்றார்.