வடலூர்: வடலூர் அருகே கரைமேடு கிராமத்தில் வசிக்கும் கலியன் மகன் உதயநிதி (32) அதே ஊரை சேர்ந்த ஞானமூர்த்தி மகன் வசந்தகுமார் (29) இவர்கள் இருவரும் நேற்று மாலை தனது சொந்த ஊரிலிருந்து குறிஞ்சிப்பாடி செல்வதற்காக மருவாய் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது மருவாய் பாலம் அருகே வந்தபோது சாலையில் மணி பர்ஸ் ஒன்று கிடந்தது. அதனை எடுத்து சோதனை செய்த போது அதில் ரூ. 12, 841 பணம் மற்றும் டிரைவிங் லைசன்ஸ், உள்ளிட்டவை இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர்கள் வடலூர் காவல் நிலையத்திற்கு வந்து அந்த மணி பர்ஸை உதவி ஆய்வாளர் பரந்தாமனிடம் ஒப்படைத்து அதை உரிய நபரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனா். இதில் பா்ஸை தவறவிட்டது விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் அஜித்குமார் 27; என்பது தெரிந்தது. அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து காவல் ஆய்வாளா் உதயகுமார் மேல் விசாரணை செய்து உரிய அடையாளம் உண்மை சான்றிதழ் நகல் பெற்ற பின்னா் பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்களையும் வரவழைத்து பணத்துடன் பா்சை அவர்களது கையில் கொடுத்து அஜித் குமாரிடம் வழங்கினார்கள். மேலும் இளைஞர்களின் நேர்மையை பாராட்டும் வகையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் பொன்னாடை அணிவித்து ஊக்குவித்து கௌரவித்தார்.
