Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாராட்டு மழை

இந்தியாவில் பெண்கள் விவசாயம் முதல் விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் பெண்கள் முன்னேறி, பல சவால்களை தாண்டி உலக அளவிலும் தனித்தன்மையுடன் திகழ்கின்றனர். ஐஐடி மாணவி `பெண் அயன்மேன்’ பட்டம் வென்றது, 50 வயதுக்கு மேற்பட்ட சாதனை பெண்களின் பட்டியலில் ஊர்மிளா, கிரண் மஜும்தார் ஷா, ஷீலா படேல் ஆகிய 3 இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர். வயது வித்தியாசமின்றி பெண்கள் பல துறைகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். அந்த வரிசையில் மகளிர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

13வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் தோல்வி கண்டு நடையை கட்டின. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் எப்படியாவது உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தொடரை தொடங்கியது இந்திய அணி. லீக் சுற்றில் சற்று தடுமாறினாலும், அரையிறுதியில் பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 298 ரன்கள் குவித்தது. 87 ரன்கள் குவித்த 21 வயதான ஷபாலி வர்மா, உலக கோப்பை பைனலில் அதிக ரன்கள் குவித்த இந்திய தொடக்க வீராங்கனை என்ற சிறப்பை பெற்றதுடன், மிக இளம் வயதில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார்.

கடைசி நேரத்தில் ரிச்சா கோஷ் அதிரடியாக 34 ரன்கள் திரட்டியதுடன் இத்தொடரில் 12 சிக்சர்கள் விளாசிய அவர், நடப்பு உலக கோப்பையில் அதிக சிக்சர்கள் விளாசியவர் எனும் பெருமையை பெற்றார். உலக கோப்பை பைனல் வரலாற்றில் இந்திய மகளிர் அணியின் அதிகபட்ச ரன்னாகவும் இது பதிவானது. தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 52 ரன்கள் வித்யாசத்தில் வென்ற இந்திய அணி, முதன்முறையாக கோப்பையை வென்று வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைத்தது. இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகி விருது வென்ற ஷபாலி வர்மாவுக்கு வயது 21 ஆண்டுகள் 279 நாட்கள்தான்.

இதன் மூலம் ஐ.சி.சி. ஆண்கள் மற்றும் மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டியில் குறைந்த வயதில் ஆட்ட நாயகி விருதை வென்ற வீராங்கனை என்ற உலக சாதனையை ஷபாலி படைத்துள்ளார். மகளிர் உலக கோப்பை வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை கொண்டதாகவும் அமைந்தது. அந்த வகையில் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு சுமார் 37 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. பிசிசிஐ சார்பிலும் 51 கோடி ரூபாய் இந்திய அணிக்கு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் பரிசு மற்றும் பாராட்டு மழையில் மகளிர் அணியினர் நனைந்து வருகின்றனர்.