லாஸ் வேகாஸ்: ஃப்ரிஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசி சிறப்பாக ஆடி அரை இறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில், இந்திய வீரர் அர்ஜுன் எரிகேசி, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய அர்ஜுன் 1.5-1.0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அமெரிக்க வீரர் கரவுனாவுக்கு எதிரான நடந்த காலிறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா, 3-4 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியை தழுவி போட்டியில் இருந்து வெளியேறினார். மற்ற காலிறுதிப் போட்டிகளில் அமெரிக்க வீரர்கள் லெவோன் ஆரோனியன், ஹான்ஸ் மோக் நீமான் வெற்றி பெற்றனர். இப்போட்டிகளின் இறுதிக்கட்டமாக நடக்கும், முதல் அரை இறுதிப் போட்டியில் ஆரோனியனை, அர்ஜுன் எரிகேசி எதிர்கொள்ள உள்ளார். மற்றொரு அரை இறுதியில் பேபியானோ கரவுனாவுக்கு எதிராக நீமான் களம் காண்பார்.