Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் புதிய முயற்சி 37 சோலார் கிராமம் அமைக்கும் பணி தீவிரம்: சூரிய மின்சக்தியின் பயன்

தமிழ்நாடு அரசு 2030ம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் மொத்தம் 20 கிலோவாட் சூரிய சக்தி மற்றும் 10,000 மெகாவாட் மின்கலன் கட்டமைப்பை உருவாக்கும் என 2022ம் ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, சூரிய மின்சக்தி, காற்றாலை, நீர்மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக மாநிலத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்களை மின்வாரியம் தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சூரிய மின் சக்தி மூலமாக மின் உற்பத்தி செய்வதற்காக ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் மூலமாக தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்து 37 மாவட்டங்களில் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அங்கு ரூ.1 கோடி மானியத்துடன் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் செய்து வருகிறது.

அண்மையில் சோலார் கிராமத்திற்காக சரியான கிராமத்தை தேர்வு செய்வது, சூரிய சக்தி மின்நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆலோசனை பணிகளுக்காக தமிழக அரசுடன் ஆரோவில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலத்தின் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதில், சூரிய ஆற்றலின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும், கிராமங்கள் தங்கள் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில் தன்னிறைவு பெற உதவுவதையும் நோக்கமாக கொண்டு தமிழ்நாட்டில் 37 கிராமங்களில் சோலார் சிஸ்டம் உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம். அந்தவகையில், 5 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட ஒரு வருவாய் கிராமத்தை தேர்வு செய்து அந்த கிராமத்திற்கு வீடுகள், விவசாய பம்புகள், பொது பயன்பாடு கட்டிடங்கள், தெருவிளக்கு போன்றவற்றில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் வகையில் ஒன்றிய அரசு ஒரு கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யகிறது.

இதன் மூலம் அந்த கிராமம் தாங்களே எரிசக்தியை உற்பத்தி செய்து செலவை குறைக்கும் வகையில் சுயநிறைவை அடைய உதவும். இதனால், பசுமை மற்றும் சுத்தமான ஆற்றலின் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும். இந்த கிராமங்களை தேர்ந்தெடுப்பதற்கான குழு அமைக்கப்பட்டு அதன் மூலமாக தற்போது 37 கிராமங்களில் 33 கிராமங்களுக்கு சூரிய மின்சக்தி அமைப்பதற்கான தொழில்நுட்ப ஆய்வறிக்கைகளை தயார் செய்துள்ளோம்.

மீதமுள்ள நான்கு கிராமங்களை விரைவில் அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல், தற்போது ஆலோசனை பணிகளுக்காக ஆரோவில் என்ற ஆலோசனை நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதவிர, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு வாயிலாகவும் தகுதியின் அடிப்படையில் சோலார் கிராமம் அமைப்பதற்கான தேர்வுகள் என்பது நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

* நுகர்வோரிடம் நேரடி கொள்முதல்

தமிழ்நாட்டில் 37 சோலார் கிராமங்கள் அமையும்பட்சத்தில் நுகர்வோரிடம் வீட்டு தேவைகளை தவிர்த்து அவர்களிடம் மின்வாரியமே மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் தனியாரிடம் இருந்து வாங்கக்கூடிய மின் கொள்முதல் சோலார் கிராமங்கள் உற்பத்தி மூலமாக அவர்களின் தேவை என்பது குறைந்துவிடும்.

* தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலமாக வீட்டு விளக்கு அமைப்புகள், சூரிய நீர் அமைப்புகள், விவசாயத்திற்கான சூரிய சக்தி பம்புகள் மற்றும் கிராம சாலைகள் மற்றும் பொதுவான உள்கட்டமைப்பை உள்ளடக்கிய சூரிய தெரு விளக்குகள் மின் உற்பத்திகளை ஊக்குவிக்கும்.

* சோலார் மின் உற்பத்தியில் முதலிடம் நோக்கி தமிழகம்

இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தான் சோலார் மின் உற்பத்தியில் மூன்றாம் இடம் வகிக்கிறது. அதேபோல், சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கவும், அதனை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையும் அரசு எடுத்து வருகிறது.

கடந்த 6 மாதத்தில் மட்டும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 76 ஆயிரம் சூரிய மின்சக்தி மேற்கூரை தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சோலார் தடுகள் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இந்த சோலார் கிராமங்கள் மூலமாக சோலார் மின் உற்பத்தியில் தமிழகம் விரைவில் முதலிடம் பிடிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

* மானிய தொகை விவரம்

சூரிய மின்சக்தி திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கிலோ வாட் மேற்கூரை சூரிய தகடு அமைத்தால் ரூ.30 ஆயிரமும், இரண்டு கிலோ வாட் சூரிய தகடு அமைத்தால் ரூ.60 ஆயிரமும், மூன்று கிலோ வாட் சூரிய தகடு அமைத்தால் ரூ.78 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிலோவாட் மேற்கூரை சூரிய தகடு ஒரு நாளுக்கு 4 - 5 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் பெற்றது. இதனால் நுகர்வோர் செய்யும் முதலீட்டை விரைவில் திரும்ப பெற்றுவிடலாம். இந்த மானிய தொகை நுகர்வோர் வங்கி கணக்கில் நேரடியாக சூரிய திட்டப்பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் செலுத்தப்படுகிறது.