திருத்தணி: பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள வணிக வளாக கட்டிடம் திறப்பு விழாவிற்காக வியாபாரிகள் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், வியாபாரிகளுக்கு கடைகள் குத்தகை உரிமம் வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.திருத்தணி அடுத்த, பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், திருத்தணி, வேலூர், காஞ்சிபுரம், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான பலவீனமடைந்த வணிக வளாக கட்டிடத்தை அகற்றி, இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. பழைய வணிக வளாகம் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டிடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 18 கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பொதட்டூர்பேட்டையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். பயணிகளுக்கு வசதிகள் மேம்படுத்தும் வகையில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் முழுமையாக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரும்பு தூண்கள் அமைத்து மேற்கூரை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மின் விளக்கு, பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் நிலுவையில் உள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதால், வியாபாரிகள் மட்டுமின்றி பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். வணிக வளாகம், பேருந்து நிலைய மேற்கூரை அமைக்கும் பணிகள் முழுமை பெற்றுள்ள நிலையில், விளக்குகள் மற்றும் பயணிகள் அமர நாற்காலிகள் அமைத்து விரைவில் பேருந்து நிலையம் திறந்து கடைகளுக்கு ஏலம் நடத்தி குத்தகை உரிமம் வழங்க வேண்டும் என்று நகர வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ, வாகனங்கள் ஆக்கிரமிப்பு;
பேருந்துகள் மற்றும் பயணிகள் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான கார்கள், வேன் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பேருந்துகள் வந்து செல்ல இடையூறாக உள்ளதாகவும், இதனால் வாகன விபத்து ஏற்பட்டு வருவதாக பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.


