நடைமுறைக்கு வந்த மாற்றம் அமலுக்கு வரவில்லை அஞ்சல்துறையில் காப்பீடு தொகைக்கு செப்டம்பர் இறுதிவரை ஜிஎஸ்டி உண்டு: காப்பீடுதாரர்கள் ஏமாற்றம்
நாகர்கோவில்: அஞ்சல் துறையில் காப்பீடு தொகைக்கு செப்டம்பர் இறுதி வரை ஜிஎஸ்டி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் காப்பீடுதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆயுள் காப்பீட்டு துறையில் வரி தீர்வை எளிதாக்கும் வகையில் ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. தனிநபர் ஆயுள் காப்பீட்டு சேவைகளில் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) இனி நீக்கப்பட உள்ளது. செப்டம்பர் 22 முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
காப்பீடு பெறுபவர் ஒரு குழுவாக இல்லாமல் தனி நபராக இருந்தால், அவருக்கு வழங்கப்படும் ஆயுள் காப்பீட்டு சேவைகளில் ஜி.எஸ்.டி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற ஆயுள் காப்பீடு திட்டங்களில் இச்சலுகை அமல்படுத்தப்படும் வகையில் மென்பொருள் ஒன்றிய அளவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான விவரங்கள் அனைத்து தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. விற்பனை குழுவினருக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகைகளுக்கு ஜி.எஸ்.டி தொடர்ந்து விதிக்கப்படும். இது ரிவர்ஸ் சார்ஜ் முறை மூலம் செலுத்தப்பட வேண்டும்.
மேலும் பிஎல்ஐ மற்றும் ஆர்பிஎல்ஐ விற்பனை குழுவினருக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகைக்கு செலுத்தப்படும் ஜி.எஸ்.டி.க்கான இன்புட் டேக்ஸ் கிரடிட்டை-ஐ தபால் அலுவலகங்கள் பயன்படுத்த முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து தபால் அலுவலகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய தபால் ஆயுள் காப்பீட்டு பிரிவு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் அனைத்து நிலைகளிலும் ஜிஎஸ்டி குறைப்பு நேற்று (22ம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்து செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் அஞ்சல்துறையில் உள்ள சாப்ட்வேரில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் பழைய முறையே தொடர்கிறது.
மேலும் செப்டம்பர் 22ம் தேதி என்பது அக்டோபர் 1ம் தேதி முதல் தான் ஆயுள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி நீக்கம் மாற்றம் அமல்படுத்தப்படும் என்றும் அஞ்சல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 1 முதல் வரவேண்டிய பிஎல்ஐ, ஆர்பிஎல்ஐ காப்பீட்டு தவணைகளில் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாது. ஆனால் செப்டம்பர் வரை வரவேண்டிய தவணைகள், 22.09.2025க்கு பிறகு செலுத்தப்பட்டாலும், அவற்றில் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். 22.09.2025க்கு பிந்தைய புதிய காப்பீட்டு திட்டங்களில் ஜி.எஸ்.டி விதிக்கப்படாது. செப்டம்பர் வரை நிலுவை தவணைகளுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி தொடரும். ஆனால், அக்டோபர் 2025 முதல் வரவேண்டிய தவணைகளின் தாமதக் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாது. இதனால் செப்டம்பர் 22ம் தேதிக்கு பின்னர் காப்பீடு பிரிமியம் தொகை செலுத்தினால் ஜிஎஸ்டி வராது என்று எண்ணி காப்பீடு பிரிமியம் செலுத்தாமல் இருந்த காப்பீடுதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
* விற்பனை குழுவினருக்கான ஊக்கத் தொகை
விற்பனைக் குழுவினருக்கான ஊக்கத் தொகைகளில் ஜி.எஸ்.டி ரிவர்ஸ் சார்ஜ் முறை வழியே தொடரும். விற்பனை ஊக்கத்தொகைகளுக்கு செலுத்தப்படும் ஆர்சிஎம் ஜி.எஸ்.டி-க்கான இன்புட் டேக்ஸ் கிரெடிட் 22.09.2025 முதல் தபால் அலுவலகங்களுக்கு கிடையாது. மென் பொருளில் தேவையான திருத்தங்கள் மத்திய அளவில் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி-க்கு பணத்தைத் திருப்பி வழங்க முடியாது. தவணைகள் மற்றும் மறு புதுப்பிப்பு கட்டணங்களில், நிலுவைத் தேதிகளுக்கு ஏற்ப ஜி.எஸ்.டி விலக்கு தானாகவே அமல்படுத்தப்படும் என்றும் புதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.