சென்னை: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதியை கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணம் உள்ளிட்ட வழக்குகளில் அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்துகின்றனர். முன்னதாக, இந்த அறிக்கை மருத்துவமனையில் இருந்து மூடிய நிலையில் சீல் வைத்து போலீசாரும், நீதிமன்றமும் பெற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், டாக்டர்கள் பணி மாறுதல் காரணமாக கையொப்பம் பெறுவதில் சிக்கல், போலீசார் நேரில் சென்று அறிக்கை வாங்கும் தாமதம் போன்ற பிரச்சினைகள் அதிகமாக இருந்தன.
இவ்வாறு பல சிக்கல்கள் நிறைந்த இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இந்த சிக்கல்களை தீர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய வசதியை கொண்டு வர உள்ளது. அதன்படி, மருத்துவமனை சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அறிக்கைகளை நீதிமன்றம் மற்றும் போலீசார் மட்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என அனைத்தும் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது; பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சோதனை முறையில் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்துக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் அறிக்கையை நீதிமன்றம், போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்யலாம். பாதுகாப்பு கருதி இறந்தவர்களின் குடும்பத்தினர் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.