தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் தவெக தலைவர் விஜய்யை கலாய்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையில் கடந்த 21ம் தேதி நடந்த தவெக 2வது மாநில மாநாட்டில் தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக தொண்டர்கள் மாநாட்டில் அங்குள்ள மரம், டவரில் ஏறி நிற்கும் காட்சிகளும், தொண்டர்கள் ஏறிக்குதிக்காமல் தடுக்க கம்பிகளில் கிரீஸ் தடவப்பட்ட காட்சியும், ராம்ப் வாக்கில் விஜய் நடந்து வரும்போது தொண்டர்கள் விஜய் அருகே வருவதற்கு முயற்சி செய்தபோது பவுன்சர்கள் தொண்டர்களை தூக்கி வீசும் காட்சிகளும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேர்கள் உடைத்த காட்சிகளும் மாநாட்டில் அரங்கேறியது.
இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக கண்டனங்கள், விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் தவெக தலைவர் விஜய் படத்தை அனிமேஷன் செய்து வாட் ப்ரோ, மரத்தில ஏறாத ப்ரோ, சேர உடைக்காத ப்ரோ, கம்பியில் கிரீஸ் தடவாத ப்ரோ, கேரள பவுன்சர் கிட்ட அடி வாங்காத ப்ரோ (இவன் ஆறுமுகநேரி நகரம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக) என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.