‘எங்கள் மண்ணில் என்ன வேலை’ எடப்பாடி வருகையை கண்டித்து தென்மாவட்டங்களில் போஸ்டர்: ஆண்டிபட்டி நகரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செப். 1 முதல் 4ம் தேதி வரை மதுரையில் பிரசார பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். ஆண்டிபட்டி நகரில் நேற்று முன்தினம் இரவு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். நேற்று காலை ஆண்டிபட்டி நகர் முழுவதும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தேவர் பேரவை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
அதில், ‘‘முக்குலத்தோரை வஞ்சிக்கும் உங்களுக்கு தேவர் மண்ணில் என்ன வேலை... பழனிசாமியே தேவர் மண்ணில் காலடி வைக்காதே’’ என்ற வாசகங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இதேபோல தேனி மாவட்டம் மற்றும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து, ‘‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை உடனடியாக ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிமுக பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்’’ என்று கூறியிருந்தார். அவரது சந்திப்பிற்கு முன்னதாகவே கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.