Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

`2026 தேர்தலில் படுதோல்வி அடையச் செய்வோம்’: எடப்பாடி, நயினாருக்கு எதிராக சிவகங்கையில் பரபரப்பு போஸ்டர்

சிவகங்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு எதிராக சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், இந்த கூட்டணியை `பொருந்தா கூட்டணி’ என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், பாஜவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு எதிராக சிவகங்கையில் நேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போஸ்டரில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களை குறிப்பிட்டு, `மேலே உள்ளவர்கள்தான் தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டத்தின் முகங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில் தெரிவித்துள்ளதாவது: மேலே உள்ளவர்கள் தான் தென்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டத்தின் முகங்கள்.

தப்புக்கணக்கு போடும் எடப்பாடி அணி மற்றும் பாஜக கூட்டணியை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதிகளில் படுதோல்வி அடையச் செய்வோம். 2 செல்போன் வைத்திருக்கும் நயினார் நாகேந்திரன் முதல் செல்போனை தொழிலுக்கும், 2வது செல்போனை அரசியலுக்கும் பயன்படுத்தி வந்ததால்தான் அவர் அதிமுகவில் இருந்தபோது, அவரிடம் இருந்த மாநில புரட்சி தலைவி பேரவை செயலாளர் பதவியை அம்மா பறித்தார். இவ்வாறு போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களால் சிவகங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.